நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் தெரிவின் போது ஜனநாயக தமிழ் தேசியகூட்டமைப்பு தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக வெளியாகிய செய்தி
உண்மைக்கு புறம்பானது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான
அமர்வு நேற்று (25) காலை 8.30 மணி அளவில் வடக்கு மாகாண
உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நானாட்டான் பிரதேச சபையில்
நடைபெற்றது.
தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு
இதன் போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் அன்ரன் அன்று ராஜன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சி
உறுப்பினர் ஜெறோம் இருதயதாஸ் ஆகியோரது பெயர்கள் முன் மொழியப்பட்டது.

சபையில் உள்ள 17 உறுப்பினர்களில் சுயேட்சைக் குழு உறுப்பினர்
ஒருவர் வெளிநடப்பு செய்தார்.
ஏனைய 16 உறுப்பினர்களும் கலந்து கொண்டு பகிரங்க வாக்கெடுப்பை
கோரியிருந்தனர்.
இதன்போது இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் ஜெறோம் இருதயதாஸ் 06
வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் அன்ரன் அன்று ராஜன் 10
வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.
அதி கூடிய வாக்குகளை பெற்ற தேசிய மக்கள்
சக்தி உறுப்பினர் அன்ரன் அன்று ராஜன் நானாட்டான் பிரதேச சபையின் தலைவராக
தெரிவு செய்யப்பட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு
அவருக்கு தொழிலாளர் கட்சி, சுயேட்சை குழு உறுப்பினர் ஒருவர், ஐக்கிய மக்கள்
சக்தி ஆகிய கட்சிகள் ஆதரவை வழங்கி இருந்தனர்.

எனினும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரவை வழங்கியதாக செய்தி வெளியாகி
உள்ளது.அச் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2 உறுப்பினர்களும் இலங்கை தமிழரசுக்
கட்சிக்கே வாக்களித்துள்ளனர்.
எனவே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் இணைந்து மேற்கொண்ட
தீர்மானத்திற்கு அமைவாக இலங்கை தமிழரசு கட்சி வேட்பாளரை ஆதரித்தனர் என அவர்
மேலும் தெரிவித்துள்ளார்.

