தம்புள்ளை – குருநாகல் பிரதான வீதியின் கலேவெல, கனதன பகுதியில் சொகுசு பயணிகள் பஸ் ஒன்று, வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணித்த பயணிகள் சிலர் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து இன்று புதன்கிழமை பிற்பகல் 2.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னால் சென்ற வாகனமொன்றை முந்திச் செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது, எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதுவதைத் தவிர்ப்பதற்காக பஸ்ஸை ஓட்டுநர் இடது பக்கமாக திருப்பியுள்ளார். அந்தச் சந்தர்ப்பத்தில் வேகம் கட்டுப்பாட்டை இழந்த பஸ், வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் பலமாக மோதியுள்ளது.
இவ்விபத்து காரணமாக சொகுசு பஸ்ஸுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கலேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

