நாட்டின் ஒன்பது மாகாண சபைகளில் ஏதேனும் ஒரு மாகாண சபையிலாவது தேர்தலை நடத்தித் காட்டுமாறு சர்வஜன அதிகாரம் கட்சியின் உப தலைவர் கலாநிதி சன்ன ஜயசுமன அரசாங்கத்துக்குப் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
நிட்டம்புவ பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன ஒன்றிணைந்து எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்குத் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் இவ்வாறான அரசியல் கூட்டணிகள் உங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாதா என்று பலரும் வினவுகின்றனர்.
முதலில் தேர்தலொன்று நடத்தப்பட வேண்டும். அரசாங்கத்துக்குத் தைரியமிருந்தால் தேர்தலை நடத்திக் காட்டட்டும். மக்களின் பேராதரவு தமக்கு இருப்பதாகக் கூறிக்கொள்ளும் தற்போதைய அரசாங்கத்ததுக்கு, தைரியமிருந்தால் நாட்டின் 9 மாகாண சபைகளில் ஏதேனும் ஒரு மாகாண சபைக்காவது தேர்தலை நடத்தித் காட்டுமாறு சவால் விடுக்கின்றேன்.
விசேடமாக நாட்டின் விவசாயப் சமூகத்தினர் வாழும் பகுதிகள் இன்று பாரிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் எந்தவொரு மாகாணத்திலும் குறிப்பாக விவசாயிகள் வாழும் பகுதிகளில் அரசாங்கத்தினால் 20 சதவீத வாக்குகளைக் கூடப் பெற்றுக்கொள்ள முடியாது.
தற்போது சந்தையில் 1 கிலோகிராம் நெல்லின் விலை 93, 95 ரூபா என்ற மிகக் குறைந்த மட்டத்துக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் மறுபுறத்தில், விவசாயிகள் பயன்படுத்தும் 1 மூடை யூரியா உரத்தின் விலை 2000 ரூபா வரை அதிகரித்துள்ளது. எந்தவொரு கணக்கீட்டின்படி பார்த்தாலும், தற்போதைய உற்பத்திச் செலவுகளுக்கு மத்தியில் நெல் கிலோவொன்றுக்கு 100 ரூபா கிடைத்தாலும் கூட விவசாயிகளுக்கு இலாபம் கிடைப்பது சாத்தியமற்றதாகும்.
அவர்கள் செய்த செலவைக்கூட மீளப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையே ஏற்பட்டுள்ளது. எனவே, அரசாங்கம் உடனடியாக தலையிட்டு 1 கிலோகிராம் நெல்லிற்கான குறைந்தபட்ச விலையை 130 ரூபாவாக நிர்ணயிக்க வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம். என்றார்.

