மத்திய மலைநாட்டில், குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கடும் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதுடன், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு நிலையும் ஏற்பட்டுள்ளது.
வானிலை மையத்தின் தகவலின்படி, மவுஸ்சாகலை நீர்த்தேக்கப் பகுதியில் நேற்று (01) 117.5 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேவேளை, லக்சபான நீர்மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள பகுதியில் 183.3 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தொடர்ச்சியான கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல பகுதிகளில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சாமிமலை ஓயா, மரே ஓயா, சியத்தலகங்குல ஓயா, காட்மோர் ஓயா உள்ளிட்ட சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும், காட்மோர், மோகினி எல்ல, மரே மற்றும் லக்சபான நீர்வீழ்ச்சிகளில் அதிகளவு நீர் பாய்ந்து வருவதால், அப்பகுதிகளுக்கு பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், விமலசுரேந்திர நீர்த்தேக்கம் நிரம்பியுள்ளதால், அதன் மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், மவுஸ்சாகலை, காசல்ரீ, கென்யோன், புரோட்லேன்ட், லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல மற்றும் மேல் கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருவதாக நுவரெலியா மாவட்ட காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
நீர்மட்டம் மேலும் அதிகரித்தால் எந்த நேரத்திலும் வான்கதவுகள் திறக்கப்படக்கூடும் என்பதால், ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ வரையில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் இடியுடன் கூடிய பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும்.
வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு (40-50) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு (50-60) கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
எனவே, இக்கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் மீன்பிடி மற்றும் கடற்படையினர் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பகுதிகளில் அலைகளின் உயரம் (2.5 – 3.0) மீற்றர் வரை உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

