அகில இலங்கை ரீதியாக இன்று (09) ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் சென்றனர்.
இதன்படி, திருகோணமலை, தோப்பூர் – அல்ஹம்றா மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை மத்திய நிலையத்தில் தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளின் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர்.
உடப்பிலிருந்து 24 மாணவர்களும், ஆண்டிமுனையிலிருந்து 50 மாணவர்களும் தமது பாடசாலைகளிலிருந்து பரீட்சை நிலையத்திற்கு ஆர்வத்துடன் சென்றதை காணக்கூடியதாக இருந்தது.
மாணவர்களை பெற்றோர்களும் ஆசிரியர்களும் அன்புடன் வழியனுப்பி வைத்ததுடன், பரீட்சையை சிறப்பாக எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளையும் வழங்கினர்.
இதேவேளை இம்முறை கந்தளாய் கல்வி வலயத்திற்குட்பட்ட மொத்தம் 37 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இப்பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.
கந்தளாய் அக்ரபோதி தேசிய பாடசாலை உள்ளிட்ட முக்கிய பரீட்சை மையங்களில் பரீட்சைக்கான அனைத்துக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் வலயக் கல்வி அலுவலகத்தின் வழிகாட்டலின் கீழ் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.
மேலும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் பெற்றோரின் பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு கல்வி வலயம்,மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம்,மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம்,பட்டிருப்பு கல்வி வலயம்,கல்குடா கல்வி வலயம் ஆகியவற்றில் உள்ள பாடசாலைகளில் இன்றைய தினம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெற்றது.
இன்றைய தினம் மாணவர்கள் ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை முன்னெடுத்து பரீட்சை நிலையங்களுக்கு சென்றதை காணமுடிந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் சுமுகமான முறையில் பரீட்சைகள் நடைபெற்றன.
பரீட்சை நிலையங்களுக்கு முன்பாக பெற்றோர் பெரும் எதிர்பார்ப்புடன் நின்றுகொண்டிருப்பதை காணமுடிந்தது.
இதற்கமைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அம்பாறை மாவட்டத்தில் கடும் வெயிலுக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றது. பரீட்சை காலை 09.30 மணிக்கு ஆரம்பமானதுடன் பரீட்சார்த்திகள் அனைவரும் உரிய ஒழுங்கமைப்புடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றதை காண முடிந்தது.
இன்று காலை ஆரம்பமான குறித்த பரீட்சைக்கு கல்முனை கல்வி வலயம், சம்மாந்துறை கல்வி வலயத்தை சேர்ந்த மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சைக்கு சமூகமளித்திருந்தனர்.
நுவரெலியா மாவட்டத்தில் கொட்டும் மழையிலும் தரம் ஜந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான மாணவ மாணவிகள் வெகு ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இதேவேளை, இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறுகிறது.
இப்பரீட்சைக்கு மொத்தம் 294,089 மாணவர்கள் தோற்றுகின்றனர். அவர்களில் 220,366 மாணவர்கள் சிங்கள மொழியிலும், 73,723 மாணவர்கள் தமிழ் மொழியிலும் பரீட்சைக்கு தோற்றுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Source: https://samugammedia.com/students-who-went-to-the-scholarship-exam-with-enthusiasm-1786252837

