இந்தோனேசியாவின் மத்திய தீவுக்கூட்டத்திற்கு அருகில் இன்று அதிகாலை (15) 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 5.9, 5.6 மற்றும் 6.1 ரிக்டர் அளவுகளில் மூன்று தொடர் நிலநடுக்கங்களும் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இந்தோனேசியாவின் தேசிய புவியியல் நிலையம் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, கடலோரப் பகுதிகள் மற்றும் ஆற்றங்கரைகளை விட்டு விலகி பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இலங்கையின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையமும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையின் கடலோரப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் மேலும் தெரிவித்துள்ளது.

