மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் இவ்வருடம் மேற்கொள்ளப்படவுள்ள பெரும்போகப் பயிர்ச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை(15.09.2026) வெல்லாவெளியில் அமைந்துள்ள போரதீவுப் பற்றுப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது
மட்டக்களப்பு மாவட்ட அரசா அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர், கமநல அபிவிருத்தி திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட ஆணையாளர், விவசாய திணைக்களப் பணிப்பாளர், பெரும்பாக உத்தியோகஸ்த்தர்கள், வங்கி உத்தியோகஸ்த்தர்கள், திணைக்களங்கள்சார் உத்தியோகஸ்த்தர்கள், விவசாயிகள், என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட நவகிரி நீர்ப்பாசனப் பிரிவு மற்றும் தும்பங்கேணி நீர்ப்பாசனப் பிரிவுகளின் கீழ் இம்முறை மேற்கொள்ளப்படவுள்ள பெரும்போக நெற்செய்கை மற்றும் மானாவாரி வயற்பகுதி, தொடர்பான பல தீர்மானங்கள் இதன்போது எடுக்கப்பட்டன.
21058 இற்கு மேற்பட்ட வயல் நிலத்தில் இப்பிரதேசத்தில் இம்முறை பெரும்போக வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளன. 3 மாத நெல்லினங்களாக BG97-1, AT307, BG251 மற்றும் 3 அரை மாதங்கள் கொண்ட நெல்லினங்களாக BG360, BG366, BG 357, AT378, BG374, ஆகிய நெல்லினங்கள் இம்முறை விதைப்புக்காக சிபார்சு செய்யப்பட்டுள்ளன.
2026.09.20 அன்று விவசாய வேலைகள் ஆரம்பித்தல், 2026.10.20 அன்று விதைப்பு வேலைகள் ஆரம்பித்தல், 2026.11.05 அன்று விதைப்பு முடிவுறுத்துதல், 2026.11.05 அன்று காப்புறுதி செய்தல், 2027.02.15 அன்று அறுவடை ஆரம்மித்தல், எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டடுள்ளன.

