தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த வெண்கலச் சிலையை இலங்கை காவல்துறையினர் அகற்றிச் சென்றமைக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அந்த கண்டன அறிக்கையில், தியாகதீபம் திலீபனை அமைதியான முறையில் நினைவுகூருவது தமிழ் மக்களின் அடிப்படை உரிமை எனவும்,
அவரது நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த சிலையை அகற்றியமை தமிழ் மக்களின் நினைவேந்தல் உள்ளிட்ட கூட்டுரிமைகள் மீதான நேரடித் தாக்குதல் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழர் தாயகப் பகுதிகளில் கடந்த காலங்களில் நிறுவப்பட்டுள்ள போர் வெற்றிச் சின்னங்கள் தொடர்ந்தும் பாதுகாக்கப்படும் நிலையில், தமிழ் மக்கள் தியாகதீபம் திலீபனை நினைவுகூருவதற்காக அமைத்த நினைவுச் சிலையை அகற்றுவது எந்த வகையில் நீதியானது எனவும் மாணவர் ஒன்றியம் கேள்வியெழுப்பியுள்ளது.
மேலும், தமிழ் மக்களின் உணர்வுகளை மீண்டும் மீண்டும் சீண்டும் இத்தகைய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்துவதுடன்,
இனவாதப் போக்குகளுக்கு அரச இயந்திரம் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவளிப்பதாகவே கருத வேண்டியுள்ளது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தெற்கில் ஜே.வி.பி.யுடன் தொடர்புடைய நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டு நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்படும் நிலையில், வடக்கில் தமிழ் மக்களின் உரிமைக்காக உயிர் தியாகம் செய்த ஒருவரை நினைவுகூருவது கட்டுப்படுத்தப்படுவது எவ்வாறு ஜனநாயகமாகும் எனவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது.

