Home உலகம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க பிரித்தானியா மறுப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க பிரித்தானியா மறுப்பு

0

பிரித்தானியாவில் (United Kingdom) தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான மேன்முறையீட்டு ஆணைக்குழுவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் (TGTE), முன்வைக்கப்பட்ட இந்த மேன்முறையீட்டினை அந்த ஆணைக்குழு கடந்த வெள்ளிக்கிழமை (21.06.2024) ஏகமனதாக நிராகரித்துள்ளது.

இந்த மேன்முறையீடு தொடர்பில் மனுதாரர்கள் தரப்பினர்களிடம் விரிவான சாட்சிய விசாரணைகளை, கடந்த மார்ச் மாதம் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் குறித்த ஆணைக்குழு முன்னெடுத்திருந்தது.

தீர்ப்பு அறிவிப்பு 

இந்தநிலையில் அந்த மேன்முறையீடு தொடர்பான தீர்ப்பு கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டதுடன், இந்த முடிவு பிரித்தானிய நீதிமன்றத்திற்கும் அறியப்படுத்தப்பட்டுள்ளது. 

இதேவேளை விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானியா தொடர்ந்தும் கடைப்பிடிக்கும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தனது எக்ஸ் (X) தளத்தில் தெரிவித்துள்ளார்.

அவருடைய பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ”இங்கிலாந்து தடை செய்யப்பட்ட அமைப்பு மேல்முறையீட்டு ஆணையம் மற்றும் நாடாளுமன்றத்தால் அமைக்கப்பட்ட ஒரு சுயாதீன நீதிமன்றம் தலைமையில் தடை நீக்கத்திற்கு எதிராக தீர்ப்பளித்தது.

அலி சப்ரியின் கருத்து 

இலங்கையின் (Sri Lanka)வடக்கு கிழக்கில் தனிநாட்டு கோரிக்கைக்கு ஆதரவளிக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தது. 

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஐக்கிய இராச்சியத்தில் தடை செய்யப்படவில்லை, அந்த அமைப்பு சாத்வீக வழிமுறைகள் ஊடாக தனது நோக்கங்களை அடைய முயல்கின்றது.

உலக நாடுகள் தங்கள் மீதான தடையை நீக்கச் செய்வதன் மூலம் தாங்கள் மீண்டும் உயிர்பெறும் நிலையை உருவாக்குவதே விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பின் மூலோபாய அணுகுமுறை“ என அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version