Home உலகம் ஆப்கான் பெண்களின் உரிமை தொடர்பில் தலிபான் அரசின் முடிவு

ஆப்கான் பெண்களின் உரிமை தொடர்பில் தலிபான் அரசின் முடிவு

0

ஆப்கானிஸ்தானில் (Afghanistan) உள்ள பெண்களின் உரிமைகளுக்கான கோரிக்கைகள் தங்களது உள்நாட்டுப் பிரச்சினை என்று தலிபான் (Taliban) அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2021-ல் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதை அடுத்து அந்நாட்டில் பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தலிபான்களின் அரசை எந்த ஒரு நாடும் இதுவரை அங்கீகரிக்காத நிலையில் ஆப்கானுடன் சர்வதேச ஒருங்கிணைப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் ஐ.நா (United Nations) முக்கிய முன்னெடுப்பை எடுத்தது.

சர்வதேச தூதர்கள்,

தோஹாவில் (Doha) நடைபெற்ற அந்தச் சந்திப்பில் பங்கேற்க, ஆப்கானின் பல்வேறு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதேநேரத்தில், தலிபான்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இந்த கூட்டத்துக்கு தலிபான்கள் அழைக்கப்படாததால், ஐநாவின் இரண்டாவது கூட்டத்தை புறக்கணிப்பதாக தலிபான்கள் அறிவித்தனர்.

இதையடுத்து, மூன்றாவது கூட்டம் கத்தாரில் (Qatar) இன்று (30)  (ஞாயிற்றுக்கிழமை) தொடங்க உள்ளது.

அரசின் நிலைப்பாடு

ஐ.நா அதிகாரிகள் முன்னிலையில் இந்த பேச்சுவார்த்தையில், தலிபான்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஆப்கான் அரசு சார்பில் இதில் கலந்து கொள்ள இருக்கும் குழுவுக்கு தலைமை தாங்க உள்ள அரசு செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், சந்திப்புக்கு முன்பாக ஆப்கான் அரசின் நிலைப்பாடு குறித்து விளக்கி உள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான உரிமைகள் குறித்த கோரிக்கைகள் எழப்பப்பட்டு வருகின்றன. ஆனால், இது உள்நாட்டுப் பிரச்சினை.

இதற்கு தீர்வு காண, ஒரு தர்க்கரீதியான பாதையைக் கண்டறிய நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.

எங்கள் நாடு மீண்டும் மோதலிலும் முரண்பாட்டிலும் விழக் கூடாது. ஐநா கூட்டங்களில் தலிபான் அரசாங்கம் அனைத்து ஆப்கானிஸ்தானையும் பிரதிநிதித்துவப்படுத்தும்.

பொருளாதார வளர்ச்சி

ஆப்கானியர்கள் பல்வேறு குழுக்களாக கலந்து கொண்டால், நாங்கள் இன்னும் சிதறிக் கிடக்கிறோம் என்றும், எங்கள் நாடு இன்னும் ஒன்றுபடவில்லை என்றும் அர்த்தமாகிவிடும்.

தலிபான் அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் நேர்மறையான உறவை விரும்புகிறது.

பொருளாதார வளர்ச்சியை அடைவதில் பல்வேற தடைகளை நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம். அவை அகற்றப்பட வேண்டும். பொருளாதாரம் நன்றாக இருந்தால், மற்ற எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

ஐ.நா முன்னெடுக்கும் இந்த பேச்சுவார்த்தையில் ஆப்கான் பெண்கள் பிரதிநிதிகள் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆப்கான் பெண்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version