பிரித்தானியா(uk) உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்தில், நேற்று ஞாயிற்றுக்கிழமை(17.11.2024 ) காலை 11.00 மணிக்கு பண்ணிசை அணிவகுப்புடன் மாவீரர் குடும்பங்கள் வரவேற்கப்பட்டு உணர்வெழுச்சியுடன் அவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.
உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் இளையோர் அமைப்பினரது பண்ணிசை அணி வகுப்புடன் மாவீரர் துயிலும் இல்ல நுழைவாயிலில் இருந்து மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் அணிவகுப்பாக, மாவீரர் மண்டபத்தை நோக்கி அழைத்து வரப்பட்டனர்.
பொதுசுடர்கள் ஏற்றல்
அங்கு நகர சபை உறுப்பினர் சசி மயில்வாகனம், லெப்டினன் கரன் அவர்களின் சகோதரி லதா சதாபாஸ்கரன், கேணல் சங்கீதன் அவர்களின் துணைவியார் மாலா சங்கீதன், இளையோர் சார்பாக செல்வன் சுடர் வண்ணன் சோதிதாஸ், செல்வி ஜஸ்மீன் அருட்செல்வன் ஆகியோர் பொதுச்சுடர்களை ஏற்றினர்.
தொடர்ந்து பிரித்தானியாவின் தேசிய கொடியினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் சசி ஏற்ற, தமிழீழ தேசியக் கொடியினை உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் மேலாண்மை பணிப்பாளர் வசந்தன் ஏற்றி வைத்தார்.
அகவணக்கம்
தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போது வீரச்சாவினை தழுவிக் கொண்ட அனைத்து மாவீரர்களுக்கும் போரின்போது இனப்படுகொலை செய்யப்பட்ட பொது மக்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது.
ஈகைச் சுடர் ஏற்றலுடன் மண்டப நிகழ்வுகள் ஆரம்பமானது. ஈகைச் சுடரினை உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் ஆலோசகர் பாலா மாஸ்டர் அவர்கள் ஏற்ற, மலர் வணக்கத்தினை மாவீரர் இசைவாணன் அவர்களின் தாயார் எலிசபெத் ராணி அந்தோனிப்பிள்ளை அவர்கள் செய்தார்.
வரவேற்பு மற்றும் குழு நடனம்
புரட்சி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு உரையினை இன்பன் மாஸ்டர் அவர்களும் வரேவேற்பு நடனத்தினை செல்வி சுரேகா கணேசன் அவர்கள் வழங்க, குழு நடனத்தினை ஆசிரியர் செல்வி லாவண்யா வரதராஜ் அவர்களின் நெறியாளுகையில் செல்விகள்
தரணி ரமேஸ், தனுஜா ஞானலிங்கம், ரமணி சிறிமேகனராஜா, சனுகா தவராசா, ஜெய்சா ஜெயக்குமார், நிறையரசி சோதிதாஸ், மதுமித்திரா வினோத்காந்த், அபிதா சசி ஆகியோர் வழங்கினர்.
எழுச்சி பாடல்களை மைக்கல், செல்வி கார்த்திகா விக்னேஸ்வரன், செல்வன் சஞ்சீவன் வின்சரன் ஆகியோர் வழங்கினர்.
உணர்வு பூர்வமாக நடைபெற்ற மதிப்பளித்தல் நிகழ்வு
இன்றைய நாளின் பிரதான நிகழ்வான உரித்துடையோருக்கான மதிப்பளித்தல் நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான மாவீரர் குடும்பங்களுக்கு, நிகழ்வில் கலந்து கொண்ட போராளிகள் மற்றும் தேசிய செயற்பாட்டாளர்களினால் தமிழீழ தேசிய சின்னங்களில் ஒன்றான “சிறுத்தை” சின்னத்தின் அடையாளம் பொறிக்கப்பட்ட நினைவுப் பொருளினை வழங்கி மதிப்பளித்தனர்.
“எதிர்காலங்களில் புலம்பெயர் தேசங்களில் நடைபெறும் மாவீரர் நாள் நிகழ்வுகளை மாவீரர்களின் உரித்துடையோரே கையேற்று நடத்தி, தலைமுறை கடந்தும் எமது மாவீரர்களின் தியாகத்தினை நகர்த்த வேண்டும்” என்ற வேண்டுகை நிகழ்வின் சிறப்புரையில் முன் வைக்கப்பட்டது.
தமிழீழ தேசியக் கொடி
இன்றைய சிறப்பு நிகழ்வின் இறுதியில், தேசியக்கொடி கையேற்கப்பட்டு, எதிர்வரும் 24.11.2024 அன்று பிரித்தானியாவின் மத்திய பகுதியில் “தமிழீழத் தேசியக் கொடி நாளுக்காக” ஏற்றப்படுவதற்காக, நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாவீரர்களினது உரித்துடையோர்களினாலும், தேசப் பற்றாளர்களாலும் தமிழீழ தேசியக் கொடி தொட்டு ஆசிர்வதிக்கப்பட்டு, குறிப்பிட்ட நிகழ்வினை ஏற்பாடு செய்யும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது.
இக்கொடியானது குறிப்பிட்ட 24.11.2024 அன்று பிரித்தானியாவின் மத்திய பகுதியில் ஏற்றப்பட்டு, மாவீரர் நாளுக்காக மீண்டும் 27.11.2024 அன்று உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லத்தில் ஏற்றப்படுவதற்காக எடுத்துவரப்படும்.
உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் உணர்வு பூர்வமாக மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.