இஸ்ரேல் – ஹமாஸ் போரின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு கனடாவின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி இன்றுடன்(07) ஓராண்டு பூர்த்தியாகின்றது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல்வேறு நிகழ்வுகள் கனடாவின் நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இஸ்ரேல் – ஹமாஸ் போர்
கடந்த வருடம்(2023) அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் மேற்கொண்ட தாக்குதலில், 1,200 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதுடன் 250 பேர் கடத்தப்பட்டு பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டனர்.
அத்துடன், இஸ்ரேல் காசா மீது நடத்திய தாக்குதல்களில் இதுவரையில் 41,000 மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதுடன் சுமார் ஒரு லட்சம் பேர் காயமடைந்துள்ளனர்.
அந்தவகையில், இந்த போரானது உலக நாடுகள் முழுவதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், குறித்த போரில் உயிரிழந்த மக்களுக்கு ஆதரவாக கனடாவின் பிரதான நகரங்களில் பேரணிகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறை பாதுகாப்பு
ஹமாஸ் போராளிகள் பணய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என இஸ்ரேல் ஆதரவு தரப்புகள் கோரும் அதேவேளை, போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என பலஸ்தீன ஆதரவு தரப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கனடாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தினம்(07) இந்த போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் வழமைக்கு மாறாக அதிக எண்ணிக்கையில் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.