Home உலகம் கனடா நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர்கள் – ஹரி மற்றும் யுவனிதா வெற்றி

கனடா நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர்கள் – ஹரி மற்றும் யுவனிதா வெற்றி

0

கனேடிய நாடாளுமன்றத்தில் முதன் முறையாக ஈழத்தமிழ் பூர்வீகத்தைச் சேர்ந்த இருவர் ஏக காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.

நேற்று (28) இடம்பெற்ற கனேடிய பொதுத்தேர்தலில் (2025 Canada elections)  ஈழத்தமிழ் பூர்வீகத்தைச் சேர்ந்த ஐந்திற்கு மேற்பட்ட தமிழ் கனேடியர்கள் போட்டியிட்டனர்.

இந்தநிலையில் அவர்களில் ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) மற்றும் யுவனிதா நாதன் (Juanita Nathan) ஆகியோர் ஆளும் கட்சியான லிபரல் கட்சியில் வெற்றி பெற்றுள்ளனர்.

இரு ஈழத்தமிழர்கள் வெற்றி

தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் இந்த தேர்தலில் பிரதமர் மார்க் கார்னியின் (Mark Carney) லிபரல் கட்சி அறுதிப் பெரும்பான்மைக்கு குறைவான பலத்துடன் வெற்றி பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் ஆளும் லிபரல் கட்சியில் இருந்து ஈழத்தமிழ் பூர்விக தமிழ் கனேடியரும் கனேடிய நீதி அமைச்சருமான ஹரி ஆனந்தசங்கரி தனது ஸ்கார்பாரோ – கில்ட்வுட் – ரூஜ் பார்க் தொகுதியில் போட்டியிட்டிருந்தார். அதேபோல ஆளும் கட்சியில் இருந்து
யுவனிதா நாதனும் பிக்கரிங் – புரூக்ளின் தொகுதியிலும் களம் இறங்கியிருந்தார்.

இதேபோல கென்சவேட்டிவ் கட்சியில் இருந்து
லயனல் லோகநாதன், நிரான் ஜெயநேசன் ஆகிய ஈழத்தமிழ் பூர்வீக தமிழ் கனேடியர்ளும் பசுமை கட்சியில் இருந்து இன்னொரு ஈழத் தமிழரும் போட்டியிட்டிருந்தார்.

இவர்களில் ஹரி ஆனந்தசங்கரி தனது தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். இவருக்கு 34,941 வாக்குகள் கிடைத்துள்ள நிலையில் மொத்த வாக்குகளில் 63.89 சதவீதமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.

புதிய அரசாங்கம்

இதேபோல மார்க்கம் பகுதியில் நீண்டகாலமாக வசிப்பவரும் சில வருடங்களுக்கு முன்னரே பொதுப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் கனடிய பெண்மணி என்ற பதிவை பெற்றவருமான யுவனிதா நாதன், 14,000க்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று மொத்த வாக்குளில் 52 வீதம் பெற்றுள்ளார்.

ப்ரோக் பல்கலைக்கழக பட்டதாரியான யுவனிதா நாதன் ஏற்கவே உள்ளுராட்சி உறுப்பினராக இருந்த நிலையில் தற்போது நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்.

புதிய அரசாங்கத்திலும் தற்போது நீதியமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கு அந்த பொறுப்பு வழங்ககடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் புதிய அமைச்சரவையில் சிலவேளைகளில்
யுவனிதா நாதனுக்கு ஒரு பொறுப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்த தேர்தலில் எதிர்க்கட்சியில் போட்டியிட்ட லயனல் லோகநாதன் மற்றும் நிரான் ஜெயநேசன் ஆகியோர் தமக்குரிய வெற்றிவாய்ப்புக்களை தவறிவிட்டாலும் அவர்களும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/dg784eaEXBwhttps://www.youtube.com/embed/56bSFer_6JU

NO COMMENTS

Exit mobile version