Home இலங்கை அரசியல் சர்வதேச நாணய நிதியத்தின் கை பொம்மையே அநுர! சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டு

சர்வதேச நாணய நிதியத்தின் கை பொம்மையே அநுர! சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டு

0

புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஆடத் தொடங்கியுள்ளார் என முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச(sajith premadasa) சுட்டிக்காட்டியுள்ளார். 

கொழும்பில் நேற்று(02.11.2024) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அநுரவினால் மாற்றமில்லை

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக மேடைக்கு மேடை நாட்டு மக்களுக்கு பெரும் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் தற்போதைய
ஜனாதிபதி ஏற்படுத்தினார். 

முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கூறினாலும், இதுவரை குறித்த முறைமை மாற்றம் நிகழவில்லை. அவரது கட்சி, சின்னம், அணி மற்றும் அவர்களது சமூக வலைதள குழுமங்களிலேயே மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

இதுவரை இருந்து வந்த பழைய முறைமையே தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஆட்சிக்கு வந்ததும் மின்சாரக் கட்டணத்தை குறைப்போம், எரிபொருள் விலையை குறைப்போம், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்போம், கடவுச்சீட்டு வரிசையை ஒழிப்போம், வரியைக் குறைப்போம் என்று சொன்னார்கள், இவை எதுவும் நடக்கவில்லை.

பொருட்கள், அரிசி, தேங்காய் விலையை குறைக்க முடியாமல் தற்போது தேங்காய்க்கு வரிசைகள் கூட உருவாகியுள்ளது. 

அன்று எரிபொருள் விலை சூத்திரத்தை விமர்சித்து விட்டு, இன்று அதே விலை சூத்திரத்தைப் பயன்படுத்தி, உயர் வர்க்கம் பயன்படுத்தும் சுப்பர் டீசலின் விலையை மட்டும் குறைத்துள்ளனர்.சாதாரண மக்கள் பயன்படுத்தும் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படவில்லை.

சர்வதேச நாணய நிதியம்

இதெல்லாம் மக்களை ஏமாற்றும் கதைகள் ஆகும். ஆட்சிக்கு வந்த பிறகு வரியை குறைப்பதாக சொல்கிறார்களே தவிர மாற்றம் இல்லை.

சர்வதேச நாணய நிதியத்துடன் இரண்டு சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்ற போதிலும், அந்தப் பேச்சுக்களின் பின்னர், உழைக்கும் வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்தின் முன் மண்டியிட்டுள்ளார். 

அத்துடன், தற்போதைய ஜனாதிபதி ஊடகங்களுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றார்” என அவர் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version