Home உலகம் இஸ்ரேலுக்கு சர்வதேச நாடுகள் ஆயுத உதவி: ஸ்பெயின் பிரதமர் கடும் கண்டனம்

இஸ்ரேலுக்கு சர்வதேச நாடுகள் ஆயுத உதவி: ஸ்பெயின் பிரதமர் கடும் கண்டனம்

0

மத்திய கிழக்கில் மோதல் போக்கை உருவாக்கிவரும் இஸ்ரேலுக்கு சர்வதேச நாடுகள் ஆயுதங்கள் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் என ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்(Pedro Sanchez) வலியுறுத்தியுள்ளார்.

தெற்கு லெபனானில் ஐ.நா அமைதி காக்கும் படையினரால் பயன்படுத்தப்பட்ட கண்காணிப்பு நிலையத்தின் மீது இஸ்ரேலியப் படைகள் நேற்று(11) துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதுடன் இருவர் காயங்களுடன் தப்பியுள்ளதாக ஐ.நா தரப்பு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து மூன்றாவது நாளாக இஸ்ரேல் படைகள் தாக்குதல் தொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இஸ்ரேலிய ராணுவம் துப்பாக்கிச்சூடு

ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் போர் தொடுக்கும் நிலையில் அமைதி காக்கும் படையினர் மீது இஸ்ரேலிய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.

எனினும், ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் ஸ்பானிய வீரர்கள் எவரும் தாக்குதலில் சிக்கவில்லை என அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஸ்பெயின் மட்டும் 650 வீரர்களை ஐ.நா அமைதி காக்கும் படையில் லெபனானில் நிலைநிறுத்தியுள்ளதுடன்
அந்த படையினரை ஸ்பெயின் தளபதி ஒருவர் வழிநடத்துவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாடுகளின் மீது இஸ்ரேலிய ஆயுதப்படைகள் நடத்தும் தாக்குதல்களை கடுமையாக விமர்சித்து கண்டிப்பதாக ஸ்பெயின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த வருடம்(2023) அக்டோபரில் இருந்தே இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதை ஸ்பெயின் துணிச்சலுடன் நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள ஸ்பெயின் பிரதமர், சர்வதேச நாடுகளும் துணிந்து முடிவெடுக்க வேண்டும் என்றும், மத்திய கிழக்கில் அமைதி திரும்ப அதுவே உறுதியான தீர்வு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version