Home முக்கியச் செய்திகள் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு வாழ்த்து தெரிவித்த சிறீதரன் எம் பி

அநுரகுமார திஸாநாயக்கவிற்கு வாழ்த்து தெரிவித்த சிறீதரன் எம் பி

0

இலங்கையின் 9ஆவது ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ள அநுரகுமார திஸாநாயக்கவிற்கு (Anura Kumara Dissanayake) தனது வாழ்த்துகளை தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இந்தநாட்டின் அரச இயந்திரத்தின் கொள்கை வகுப்பிலும், செயற்றிறனிலும் மாற்றத்தை எதிர்பார்த்து தங்களுக்கு ஆணை வழங்கியுள்ளனர்.

எழுபது ஆண்டுகால ஒடுக்குமுறை

தென்னிலங்கை மக்களைப் போலவே, கடந்த எழுபது ஆண்டுகால ஒடுக்குமுறைத் தளைகளிலிருந்து விடுபட்டு இறைமையுள்ள இனமாக வாழ்வதற்கான ஏதுநிலைகள் தங்களின் ஆட்சிக்காலத்திலேனும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஈழத்தமிழர்களிடையே நிறைந்திருக்கிறது.

விசேடமாக, இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு இனத்தின் வலியுணர்ந்த சக பிரஜையாகவும், எமது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய அரசதலைவராகவும் செயலாற்றும் வகையில் தங்கள் தலைமையிலான ஆட்சிபீடம் கட்டமைக்கப்படுமாயின், அதுவே இந்த நாட்டின் சுபீட்சத்துக்கான அடித்தளமாக அமையும்.

ஈழத்தமிழர்களின் அரசியல்

நாட்டின் அரசியல், பொருளாதார தளம்பல் நிலைகளை சமன் செய்வதிலுள்ள சவால்களை எதிர்கொண்டு செயலாற்றத் தயாராவதைப் போன்று, ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை உணர்ந்த மக்கள் தலைவராக, இனவாதமற்ற இலங்கைத் தீவை உருவாக்கும் அரசியல் கூருணர்வு மிக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம், ஈழத்தமிழர்களின் அடிப்படை உரித்துகளை உறுதிசெய்யும் வகையில் தங்களின் ஆட்சி மலரும் என்ற எதிர்பார்ப்போடு, தங்களின் வெற்றிக்கான வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கிறேன்” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் இறைமையையும் சுய நிர்ணய உரிமையையும் அங்கீகரித்தால்தான் இலங்கைத் தீவின் பல்லினச் சூழலைப் பாதுகாக்கலாம் என புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு தமிழ் மக்கள் பொதுச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

2024 ஜனாதிபதி தேர்தல் முடிவின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version