Home உலகம் இந்தியாவை உலுக்கிய ஆணவக்கொலை: வெட்டிகொல்லப்பட்ட ஐடி ஊழிய இளைஞர்

இந்தியாவை உலுக்கிய ஆணவக்கொலை: வெட்டிகொல்லப்பட்ட ஐடி ஊழிய இளைஞர்

0

இந்தியாவில் (India), நெல்லையில் ஐடி ஊழியர் ஒருவர் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை கிளப்பியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த கவின் செல்வகணேஷ் (27) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த கவின் நேற்று (27) தனது தாத்தாவை சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள சித்த மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.

காவல்துறையினர் விசாரணை

இதன்போது, சம்பவ இடத்திற்கு வந்த மர்ம நபர் ஒருவர் கவினை சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளார்.

இது குறித்து மாநகர காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்த நிலையில், அதில் தமிழ்நாடு காவல்துறையில் உதவி ஆய்வாளர்களாக பணிபுரியும் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி என்ற தம்பதியின் மகளை கவின் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளார்.

தற்போது அந்தப் பெண் நெல்லை கேடிசி நகரில் உள்ள சித்த மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகின்ற நிலையில், அவரை பார்ப்பதற்காக அடிக்கடி கவின் தனது உறவினர்களை இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளார்.

வெட்டிக் கொலை

இதற்கிடையில் அந்த பெண்ணின் தம்பியான சுர்ஜித் (25) தனது அக்காவிடம் பழகுவதை நிறுத்திக்கொள்ளும்படி கவினை பலமுறை எச்சரித்துள்ளார்.

இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் கவின் தொடர்ந்து அந்த பெண்ணிடம் பழகி வந்த நிலையில், கவின் மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் சுர்ஜித் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று மருத்துவமனைக்கு வந்த கவினை சுர்ஜித் தனியாக அழைத்து சென்று எச்சரித்த நிலையில், அரிவாளால் கவினை வெட்டிக் கொலை செய்துள்ளார்.

குடும்பத்தினரின் கோரிக்கை

இதுதொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் கைதான சுர்ஜித் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆனால் சம்பவம் நடந்து 24 மணி நேரம் கடந்தும் சுர்ஜித்தின் புகைப்படத்தை வெளியிடாமல் காவல்துறை காலம் தாழ்த்தி வந்த நிலையில், இது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தற்போது சுர்ஜித் புகைப்படத்தை நெல்லை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளதுடன் கவின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று சுர்ஜித் பெற்றோரான காவல் அதிகாரிகள் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி இருவரும் இந்த கொலை வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version