லண்டன் (London) இயங்கிவரும் தமிழர் நகைமாடமான மீரா ஜுவல்லரி மார்ட், 25 ஆண்டுகள் வெற்றிகரமாக இயங்கி வருவதை முன்னிட்டு இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்ள்ஸ் (Charles III) தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மீரா ஜுவல்லரி மார்ட், கல்முனையைச் சேர்ந்த பொற்கை வண்ணர் பொன்னம்பலம் சங்கர் என்பவரால் 2000ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட தங்கநகை நிறுவனம் ஆகும்.
பொற்கை வண்ணர்களால் லண்டனில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது தங்க நகை மாடம் இதுவாகும்.
இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவு
மீரா ஜுவல்லரி மார்ட் இருபத்தைந்து ஆண்டுகளை நிறைவு செய்வது குறித்து அறியத் தந்ததற்கு அரசர் சார்ள்ஸ் நன்றி தெரிவிப்பதாகவும் மீரா தங்க நகை மாட த்தின் உரிமையாளர் உள்ளிட்ட அதனைச் சார்ந்த அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் இங்கிலாந்து அரசரின் பக்கிங்ஹாம் மாளிகை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மீரா ஜுவல்லரி மார்ட்டின் 25ஆம் ஆண்டு நிறைவுக்கொண்டாட்டங்கள் ஜூன் மாதம் 3ஆம் திகதி டூட்டிங்கில் சிறப்பாக நடைபெற்றன.
இதன்போது உலகப் புகழ்பெற்ற அன்பு அறிவிப்பாளர் பி எச் அப்துல் ஹமீட் (B. H. Abdul Hameed), “புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தலை நிமிர்ந்து வாழும் தமிழர்களில் ஒருவர் மீரா ஜுவல்லரி மார்ட் உரிமையாளர் பொன்னம்பலம் சங்கர்” என்று வாழ்த்தியிருந்தார்.
அத்துடன் “சங்கரின் அயராத, அதே நேரம் நேர்மையான உழைப்பும், அவர் நிறுவனம் உருவாக்கும் தங்க நகைகளின் அழகும் நேர்த்தியும் நிறைந்த தரமுமே இந்த வெற்றிக்குக் காரணம்” என்றும் அப்துல் ஹமீட் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
