உரிமை ஒரு கண் என்றால் அபிவிருத்தி மற்றைய கண்ணாக இருக்க வேண்டும் என்றும் அதற்காகவே கிழக்கு மாகாண ஆளுனர் எமக்கு
மிகுந்த ஒத்துழைப்புக்களையும் ஆதரவுகளையும் வழங்கி வருகின்றார் என வர்த்தக
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்(S.Viyalendiran) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையில் புதிதாக நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட
மூன்று கடைத்தொகுதிகளைத் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று(16.06.2024)
மாலை நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதார வீழ்ச்சி
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மத்திய அரசுக்கூடாக மட்டக்களப்பு மாவட்டத்திலே நாங்கள் இரு இராஜாங்க
அமைச்சர்களும் பல சேவைகளை செய்து கொண்டிருக்கின்றோம்.
எனினும், இன்னும் பல தேவைகள் இருக்கின்றன. அந்த தேவைகளையும் நாம் ஓரளவுக்காவது செய்து
முடித்திருக்கலாம்.
ஆனால் எமக்கு கோவிட் தொற்று மற்றும் நாட்டின் பொருளாதார
வீழ்ச்சி ஆகிய இரு பாரிய சவால்களும் பெரும் பிரச்சனையாக இருந்தன.
இவற்றால் இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. இருப்பினும் நாம் அனைத்து மூலை முடுக்குகளிலும்
வேலை செய்து கொண்டு வருகின்றோம்.
வாய்மூலமாக செய்யும் அரசியல் மற்றும் செயற்பாட்டு ரீதியான அரசியல் என இரு வித
அரசியல் உள்ளன.
வாய்மூலமான அரசியல் இலகுவானது மாறாக செயற்பாட்டு ரீதியான
அரசியல் என்பது கஷ்ட்டமானதாகும்.
பேச்சுக்கு அப்பால் நாங்கள் செயற்பாட்டு ரீதியான விடயங்களை முன்னெடுக்க வேண்டும்.
நான் 10 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றேன்.
கிழக்கு மாகாணத்திலே கடந்த காலத்தில் இருந்து செயற்பட்ட ஆளுநர்கள் ஒரு இனவாதப்போக்காக செயற்பட்டார்கள்.
அவர்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளே நின்றார்கள். அதனாலே கிழக்கு மாகாணம் அனுபவிக்க வேண்டிய பல
நல்ல திட்டங்களை இந்த மாகாணம் இழந்தது.
தற்போதைய ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்களின் வருகைக்குப் பின்னர்
மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலையிலே மாகாண நிருவாகத்திற்கு
கீழிருக்கின்ற சகல துறைகளிலும், விவேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கிழக்கு மாகாணத்தில் ஒரு வலிமையான அரசியல் கட்டமைப்பின் ஊடாக மாத்திரம்தான் எம்
சமூகத்தின் இருப்பை பாதுகாக்க முடியும் என்ற ஆளமான தூர நோக்குடன் நாங்கள்
பயணிக்கின்றோம்.
எனவே உரிமை ஒரு கண் எண்றால் அபிவிருத்தி மற்றைய கண்ணாக இருக்க வேண்டும்.
இவை இரண்டும் சமாந்தரமாக பயணிக்க வேண்டும். அதற்காக கிழக்கு மாகாண ஆளுனர் எமக்கு
மிகுந்த ஒத்துளைப்புக்களையும் ஆதரவுகளையும் வழங்கி வருகின்றார்.” என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான், கிராமிய வீதி
அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் அவர்களின் செயலாளர் முன்னாள்
கிழக்கு மாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச
சபையின் செயலாளர் ச.அறிவழகன் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டுள்ளனர்.