Home உலகம் வரலாற்றில் பதிவான பாரிய நில அதிர்வு..! அச்சத்தில் உற்றுநோக்கும் உலகம்

வரலாற்றில் பதிவான பாரிய நில அதிர்வு..! அச்சத்தில் உற்றுநோக்கும் உலகம்

0

உலகின் வலிமையான நிலநடுக்கங்களில் ஒன்று ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் தாக்கி உள்ளது.

இன்று (30) ரிக்டர் அளவுகோலில் 8.8 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் வட பசிபிக் பகுதியில் சுனாமியைத் தூண்டியது.

இதனையடுத்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாரிய நில அதிர்வு

உலக வரலாற்றில் பதிவான முதல் 10 பாரிய நில அதிர்வுகளில் ஒன்றாகவும் பதிவாகியுள்ளது.  ரஷ்யா நிலநடுக்கம் உலகை இதுவரை தாக்கிய ஆறாவது வலிமையான நிலநடுக்கமாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக ரஷ்ய அறிவியல் மையத்தினர் தெரிவித்துள்ளனர்.  

இந்த நிலநடுக்கம் கம்சட்கா தீபகற்பத்தில் 13 அடி உயர சுனாமி அலையையும் ஏற்படுத்தியுள்ளது.   

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, ரஷ்யா, ஜப்பான், சீனா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, நியூசிலாந்து, பெரு, மெக்சிகோ, ஈக்குவடோர் மற்றும் அலாஸ்காவின் சில பகுதிகளுக்கும் ஹவாய் முழுவதற்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுனாமி அலைகள் தாக்கும்

அமெரிக்காவின் மேற்கு கடற்கரையிலும், அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் மற்றும் மைக்ரோனேசியாவின் சில தீவுகளிலும் சுனாமி தாக்கம் ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் பல பகுதிகளுக்கு சுனாமி அலைகள் அண்மிக்கும் நேரங்களை அறிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி இரவு 11:35 மணிக்கு ஓரிகான் மற்றும் வொஷிங்டனையும், இரவு 11:50 மணிக்கு கலிபோர்னியாவையும், அதிகாலை 12:40 மணிக்கு சென் பிரான்சிஸ்கோ விரிகுடா மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் துறைமுகத்தையும் சுனாமி அலைகள் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜெட் விமான வேகத்தில் அலை 

இதேவேளை, சுனாமி அலைகள், ஜெட் விமான வேகத்தை போல் மணிக்கு சுமார் 700 கிலோமீட்டர் வரையான வேகத்தில் தாக்கக் கூடும் என வொஷிங்டன் பல்கலைக்கழகமும், NOAA பசிபிக் கடல் ஆய்வகமும் சேர்ந்த மூத்த ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

 

ஆய்வாளரின் கூற்றுப்படி, ஹவாய் மாநிலத்தின் வடக்குக் கரையோரத்தில் சுனாமி அலைகளால் வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது.

அதே நேரத்தில், அமெரிக்க மேற்குக் கடற்கரையில் அலைகள் குறைவாக இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version