எதிர்வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் மொராக்கோ(moroco) அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ள தகவல் வெளியான நிலையில் விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிபா 2030 உலகக் கோப்பை கால்பந்து தொடரை மொராக்கோ, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்துகின்றன. கால்பந்து தொடரை பிரம்மாண்டமாக நடத்தி பெயர் எடுப்பதற்கு மொராக்கோ நாடு இப்போதே திட்டமிட்டு வருகிறது.
இதற்காக அந்த நாடு எடுத்து வரும் நடவடிக்கை, உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தெருநாய்களை கொல்ல முடிவு
ஆபிரிக்க நாடான மொராக்கோவில் தெரு நாய்கள் அதிகம்.
கால்பந்து போட்டிகளை காண வரும் ரசிகர்களை தெய்நாய்கள் கடித்து குதறினால் தமக்கு அவப்பெயர் வரும் என்று கருதிய அந்நாட்டு அரசு, மொத்தமாக அனைத்து தெருநாய்களையும் கொல்ல முடிவு செய்துள்ளது.
உத்தேசமாக 30 லட்சம் தெருநாய்களை கொல்ல வேண்டியிருக்கும் என்றும் அந்நாட்டு அரசு கணக்கிட்டுள்ளது.
அதன்படி தெருநாய்களை கொல்லும் வேலைகள் நடந்து வருகின்றன.
மொராக்கோவின் இத்தகைய செயலுக்கு எதிராக, விலங்குகள் நல ஆர்வலர்கள், குரல் எழுப்பி உள்ளனர்.விலங்குகள் நல ஆர்வலர் ஜேன் குடால், இது குறித்து அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
‘மொராக்கோவின் அசிங்கமான ரகசியம்’
‘மொராக்கோவின் அசிங்கமான ரகசியம்’ என்ற தலைப்பில் சர்வதேச விலங்கு நலன் மற்றும் பாதுகாப்பு கூட்டணி (ஐ.ஏ.டபுள்யூ.பி.சி), நாய்கள் கொல்லப்படுவதற்கு எதிரான பிரசாரத்தை தொடங்கி உள்ளது.
இந்நிலையில், ஓகஸ்ட் 2024ல் நாய்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட்டதாக மொராக்கோ அரசு பிபாவுக்கு உறுதியளித்தது.
ஆனாலும் நாய்களை கொல்வது நிற்கவில்லை என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. நாய்களுக்கு விஷம் கொடுத்தும், சுட்டுக் கொல்லப்படுவதாகவும், பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.