‘டித்வா’ சூறாவளிப் பேரழிவைத் தொடர்ந்து நாட்டில் அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால நிலைமை, இம்மாதத்துக்கு மேல் நீடிக்கப்படமாட்டாது என்று அரசு இன்று அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் நடைமுறையிலிருந்த அவசரகாலக் கட்டுப்பாட்டு வழிமுறைகள் முடிவுக்கு வருகின்றன.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அரசாங்க ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இதனை உறுதிப்படுத்தினார்.
இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“டித்வா’ சூறாவளி தாக்கியதைத் தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து, எதிர்க்கட்சிகளுடன் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னரே அவசரகால நிலையை நடைமுறைப்படுத்தும் முடிவு ஆரம்பத்தில் எடுக்கப்பட்டது.
இந்த அவசரகாலச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படலாம் எனக் கூறி சில தரப்பினர் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த முயன்றனர். ஆனால், சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகளை எவ்வித தடையுமின்றி விரைவாக முன்னெடுப்பதற்காக மட்டுமே அரசு இதனை அமுல்படுத்தியது.
இந்தச் சட்டத்தின் மூலம் எந்தவொரு சாதாரண குடிமகனுக்கோ, ஊடகவியலாளருக்கோ அல்லது ஊடக நிறுவனங்களுக்கோ எவ்வித இடையூறும் ஏற்படுத்தப்பட மாட்டாது என்று நாம் அன்று உறுதியளித்திருந்தோம். நாம் வாக்குறுதி அளித்தபடியே, கடந்த காலங்களில் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மிகவும் பொறுப்புடன் செயற்பட்டுள்ளோம்.” – என்றார்.
அவசரகால அதிகாரங்களை மட்டுப்படுத்துவதில் தற்போதைய நிர்வாகம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய அவர், இந்த அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்பதைத் திட்டவட்டமாக வலியுறுத்தினார். அத்தோடு, இச்சட்டத்தின் பயன்பாடானது முற்றிலும் தற்காலிகமானது என்றும், பேரிடர் மீட்புப் பணிகளுடன் மட்டுமே அது தொடர்புபட்டிருந்தது என்றும் அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.
Source: https://samugammedia.com/the-emergency-law-ends-this-month—government-announcement-1782910029

