முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையை பாராட்டிய சர்வதேச நாணய நிதியம் – ஜனாதிபதி, பிரதமருடன் தூதுக்குழுவினர் சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சொனாலி ஜெயின்-சந்திரா தலைமையிலான IMF தூதுக்குழுவினர் இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர். 

இதன்போது, பொருளாதார மீட்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் இலங்கையின் மீளெழுச்சித் திறன் ஆகியவற்றை நாணய நிதியத் தூதுக்குழுவினர் பாராட்டினர்.

ஜூன் 24 முதல் 30 வரை IMF தூதுக்குழுவினர் கொழும்பிற்கு மேற்கொண்ட விஜயத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்த விஜயத்தின் போது அண்மைக்கால பேரண்டப் பொருளாதார வளர்ச்சிகள் மற்றும் நீடிக்கப்பட்ட நிதி வசதி  திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் சீர்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.

 

அரசாங்கம் பொருளாதாரத்தை வழிநடத்தும் விதம் சர்வதேச நாணய நிதியத்தின் பெரும் பாராட்டைப் பெற்றதுடன், IMF ஆதரவு திட்டங்களைச் செயல்படுத்தும் ஏனைய பல நாடுகளை விட இலங்கை அதிக முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். தொடர்ச்சியான வெளிப்புற அதிர்ச்சிகளுக்கு மத்தியிலும் பேரண்டப் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் சீர்திருத்தத் திட்டங்களுக்காகத் தீவிரமாக அர்ப்பணிப்புடன் இருப்பதற்கும் தூதுக்குழுவினர் அரசாங்கத்திற்குத் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு தங்களது தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினர் உறுதியளித்தனர்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் 07 ஆவது மீளாய்வின் போது இலங்கையின் திட்டச் செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக மதிப்பீடு செய்யப்படும் என்றும் தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தெரிவித்தனர். இத்திட்டத்தின் கீழ் இலங்கை பூர்த்தி செய்ய வேண்டிய ஏனைய பொறுப்புகள் இந்த மீளாய்வுக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதுள்ள வெளிப்புற சவால்களை வெல்வதற்கும், நிதி மற்றும் வெளிப்புற ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், மீளெழுச்சித் திறனை வலுப்படுத்துவதற்கும், அதே போல் நீடித்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் சீர்திருத்த செயல்முறையின் வேகத்தைத் தொடர்ந்து பேணுவது இன்றியமையாதது என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் அதேவேளையில் பொருளாதார மீட்சியின் பலன்கள் நேரடியாக மக்களைச் சென்றடைவதுக்கு வழிவகுப்பதே அரசாங்கத்தின் இறுதி நோக்கம் என்று ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார். பொருளாதார வளர்ச்சியை மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்க்கைத்தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக மாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.

இத்திட்டத்தை செயல்படுத்துவதில் எதிர்கொண்ட சவால்கள் குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அமெரிக்காவின் வரிக் கொள்கைகள் ‘டித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்தச் சூழ்நிலை உள்ளிட்ட வெளிப்புற அதிர்ச்சிகளால் தடைகளும் தாமதங்களும் ஏற்பட்டதாகச் சுட்டிக்காட்டினார். 

இருப்பினும்,  பேரண்டப் பொருளாதாரம் மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்குக் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்ததுடன் நாட்டை மீட்சிப் பாதையில் உறுதியாகக் கொண்டு செல்வதற்குக் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் கீழ் மேலும் ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே எஞ்சியுள்ள நிலையில் இத்திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும்,  பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையின் பலன்கள் அனைத்து பிரஜைகளையும் சென்றடைவதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

நீண்ட காலத் நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் அளவுகோல்களுக்கு இணங்குவது அவசியம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும் மக்கள் மீது தேவையற்ற சுமைகளை ஏற்படுத்தாமல் அவர்களுக்கு அதிகபட்ச பலன்களை வழங்கும் வகையில் அரசாங்கம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையே நிலவும் நெருக்கமான மற்றும் சாதகமான உறவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது வலியுறுத்தினார். இத்திட்டத்தை செயல்படுத்தும் ஒட்டுமொத்த காலப்பகுதியிலும் இரு தரப்பினரும் குறிப்பிடத்தக்க நெகிழ்வுத்தன்மையைக் காட்டியுள்ளதாகவும் அந்த பரஸ்பர புரிதல் மற்றும் ஒத்துழைப்பு காரணமாக சீர்திருத்தத் திட்டத்தை எந்தவொரு தடையுமின்றி சுமூகமாக முன்னோக்கி கொண்டு செல்ல முடிந்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இதன்போது இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கும் நாட்டில் நீண்ட கால பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் சுபீட்சத்தை உறுதி செய்வதற்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கான இரு தரப்பினரதும் அர்ப்பணிப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு கலந்துரையாடல் நிறைவுற்றது.

 

இதேவேளை இலங்கை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம், நாட்டின் பணவீக்கம் கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளமை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியவற்றை சர்வதேச நாணய நிதியத்தின்  பிரதிநிதிகள் பாராட்டியுள்ளனர்.

 

இலங்கை பெற்றுள்ள பொருளாதார முன்னேற்றம் மற்றும் நாட்டின் அபிவிருத்தியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதை நோக்கமாகக் கொண்டு, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினர் இன்று (30) அலரி மாளிகையில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவைச் சந்தித்தனர்.

 

இதன்போது, நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த பிரதிநிதிகள் குழுவினர், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளால் எழுந்துள்ள சவால்களை எதிர்கொள்வதற்கு இலங்கைக்கு தங்களது ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக வலியுறுத்தினர்.

 

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர், கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கிய தொடர்ச்சியான ஆதரவிற்காக தனது நன்றியைத் தெரிவித்ததுடன், எதிர்காலத்திலும் இருதரப்பிற்கும் இடையிலான பங்களிப்பைத் தொடர்ந்து பேண வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

 

உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் நிலையான முன்னேற்றத்தை அடைவதற்கு இலங்கை தனது எதிர்காலப் பாதையை வடிவமைத்துக் கொள்ள வேண்டும் எனப் சுட்டிக்காட்டிய பிரதமர், குறிப்பாக மாறிவரும் உலகளாவிய போக்குகளுக்கு மத்தியில் எரிசக்தி, துறைமுகம் மற்றும் விவசாயத் துறைகள் குறித்து அதிக கவனம் செலுத்தி, நாட்டின் வெளிப்புற அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் திறனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

 

வர்த்தகத்தை மேம்படுத்துதல், முதலீடுகளை ஈர்த்தல், சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அபிவிருத்தியை எட்டும் போது, பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகிய இரண்டையும் ஒன்றாக முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்றும், அதனை அடைவதற்கு கழிவு மேலாண்மை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொகுதிகள் போன்ற துறைகள் உட்பட வலுவான பொது உள்கட்டமைப்பு வசதிகள் இன்றியமையாதவை என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அதேபோல், திறமையான பொதுச் சேவை வழங்கலுக்குத் தடையாக இருக்கும் மனித வளப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் மேலும் வலியுறுத்தினார்.

Source: https://samugammedia.com/international-monetary-fund-praised-sri-lanka—delegation-meets-with-president-and-prime-minister-1782829309

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.