அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில், கடந்த 36 ஆண்டுகளாகத் தங்களின் பூர்வீகக் காணிகளை இழந்து நிர்க்கதியாக நிற்கும் மயிலிட்டி மக்கள், அந்த நிலங்களை விடுவிக்கக் கோரி முன்னெடுத்து வரும் அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்ந்தது.
மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக்குழு மற்றும் கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்று வரும் இப்போராட்டத்தில், வலி வடக்கு வலையத்தைச் சேர்ந்த ஜே/248, ஜே/251, ஜே/246 மற்றும் ஜே/255 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.
முன்பதாக யுத்த காலப்பகுதியில் இடம்பெயர்ந்த இப்பகுதி மக்கள், இன்றுவரை வெவ்வேறு பிரதேசங்களில் அகதி வாழ்வை வாழ்ந்து வருகின்றனர்.
அதேநேரம் யுத்தம் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையிலும், தங்களின் சொந்த நிலங்கள் இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டிருப்பது, வாழ்வாதாரத்தையும், பூர்வீகமாக வாழ்ந்த சொந்த அடையாளத்தையும் இழந்துள்ள மக்களின் மனவேதனையை மேலும் அதிகரித்துள்ளது.
இதேவேளை கடந்த அரசாங்கத்தினால் விடுவிப்பதாக இணக்கம் காணப்பட்ட காணிகள் கூட, தற்போதைய அரசாங்கத்தினால் விடுவிக்கப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருவதாக மக்கள் கடும் விசனத்தைத் தெரிவித்துள்ளனர்.
சொந்த நிலங்களை மீளப் பெற்று, கண்ணியமான முறையில் மீள்குடியேற விரும்பும் மக்களின் கோரிக்கைக்கு தற்போதைய அரசாங்கம் செவிசாய்க்க வேண்டு என்பதே மக்களுன் எதுர்பார்ப்பாக இருக்கின்றது.





