கொழும்பு துறைமுக நகரில் தங்கியிருந்த மூன்று சீன நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களில் ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் மூன்று சீன நாட்டைச் சேர்ந்த சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
கடந்த ஜூலை 23ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு முன்னெடுத்து வருகிறது.
சம்பவம் தொடர்பில் ஏற்கனவே இரண்டு சீன நாட்டவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த மூன்று சந்தேகநபர்களும் தற்போது இலங்கையில் தங்கியிருப்பதாகவும், சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்த அவர்களின் விசா காலம் நிறைவடைந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அவர்கள் விமானம் அல்லது கடல் மார்க்கம் ஊடாக சட்டவிரோதமாக நாட்டை விட்டு தப்பிச் செல்லக்கூடும் என்பதால், அவர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
இதற்கமைய, சந்தேகநபர்களின் புகைப்படங்களும் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.
குறித்த மூன்று சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியை 0718 591 735 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

