கம்பஹா – வெயங்கொடை, மகலேகொட – நைவல வீதியில் வேன் ஒன்று மின்கம்பத்துடன் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் வெயங்கொடை, ஹீந்தெனிய பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய நவோத் சதுரங்க என்ற இளைஞரும், அவரது 80 வயதுடைய பாட்டியும் உயிரிழந்துள்ளனர்.
மூத்த சகோதரியின் திருமண விழா நிறைவடைந்த பின்னர், வெயங்கொடை, ஹீந்தெனிய பகுதியில் அமைந்துள்ள தங்களது வீட்டிற்கு குடும்பத்தினர் திரும்பிக்கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மணப்பெண்ணின் சகோதரரான இளைஞர் வேனை செலுத்திச் சென்றுள்ளதுடன், அதில் அவரது தாய், தந்தை மற்றும் பாட்டி உள்ளிட்ட ஒன்பது பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தையடுத்து வேனில் பயணித்த அனைவரும் காயமடைந்த நிலையில் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், வேனை செலுத்திச் சென்ற இளைஞரும் அவரது பாட்டியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மேலும், காயமடைந்த ஏழு பேர் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக வெயங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதன் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

