அரச துறை வைத்தியசாலைகளில் மட்டுமன்றி, தனியார் துறை வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்களிலும் தற்போது கடுமையான மருந்துத் தட்டுப்பாடு நிலவி வருவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து வைத்தியர் சமல் சஞ்சீவ நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
தனியார் துறைக்கு மருந்துகளை வழங்கும் பல விநியோகஸ்தர்கள், தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் கொள்கைகள் மற்றும் பதிவு செய்யும் செயல்முறைகளில் உள்ள குறைபாடுகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலைமையே தற்போதைய தட்டுப்பாட்டிற்கு முதன்மைக் காரணமாக அமைந்துள்ளதோடு, மருந்து ஒழுங்குமுறை அதிகார சபை சந்தையில் போட்டித் தன்மையுடன் மருந்துகளை விநியோகிப்பதற்குத் தேவையான அதிகளவிலான நிறுவனங்களைப் பதிவு செய்யத் தவறியுள்ளதால் இந்நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளது.
இதன் விளைவாக, பெரும்பாலான தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்களில் அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற மாத்திரைகள், கெப்ஸ்யூல்கள் மற்றும் தடுப்பூசிகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

