நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளுக்கும் பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையினரால் வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்ந்தும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை அமைப்பின் பாதுகாப்பை தொடர்ந்து உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, அண்மையில் பல சிறைச்சாலைகளில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களுடன் பல்வேறு குழுக்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை மோதல்களின் பின்னணியில் வெளித்தரப்பினரின் தலையீடுகள் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மோதல்கள் இடம்பெற்ற சந்தர்ப்பங்களில், சில கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலைகளுக்கு அருகில் நடமாடியமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், இது திட்டமிட்ட அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட செயற்பாடாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிறைச்சாலை அமைப்பை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கோ அல்லது அதன் மீது செல்வாக்கு செலுத்துவதற்கோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா என்பது தொடர்பிலும் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கு அமைவாக, நாட்டிலுள்ள 33 சிறைச்சாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், தேவையான சந்தர்ப்பங்களில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அனைத்துப் பாதுகாப்புப் படைகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பாதுகாப்பு பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Source: https://samugammedia.com/strengthening-security-in-all-the-prisons-across-the-country-1786276208

