மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு பகுதியில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டு வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
வவுணதீவு பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் வவுணதீவு பொலிஸார் இணைந்து மேற்கொண்ட இந்த சுற்றிவளைப்பில், கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட பெருமளவான பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட கசிப்பு போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வவுணதீவு பொலிஸ் பிரிவில் அதிகரித்து வரும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியை கட்டுப்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, வவுணதீவு பிரதேசசபையின் பிரதி தவிசாளர் த. டிசாந்த் தலைமையில் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் இணைந்து கரையாக்கன்தீவு வாவிக்கரையோரப் பகுதியில் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த மூவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அங்கிருந்த கசிப்பு போத்தல்கள் மற்றும் கசிப்பு தயாரிப்பதற்கான கோடா உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பொருட்களை வவுணதீவு பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

