நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக “கிளீன் ஸ்ரீ லங்கா” (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ் பாரிய டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணியொன்று மூதூரில் இன்று (05) நடைபெற்றது.
மூதூர் மற்றும் தோப்பூர் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளின் நேரடி வழிகாட்டலின் கீழ் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதில் மூதூர் பொலிஸ் நிலைய அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அர்ப்பணிப்புடன் பொது இடங்களைத் துப்புரவு செய்தனர்.
இதன்போது, மூதூர் பொலிஸ் நிலையத்திலிருந்து மூதூர் நீதிமன்றம் வரையிலான பிரதான வீதியின் இருமருங்கிலும் உள்ள பகுதிகள் மற்றும் வடிகான்கள் அனைத்தும் முழுமையாகத் துப்புரவு செய்யப்பட்டன.
டெங்கு நுளம்புகள் பெருகும் வாய்ப்புள்ள இடங்கள் துப்புரவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இப்பகுதி டெங்கு அற்ற பகுதியாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
நாட்டில் டெங்கு அச்சுறுத்தல் அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில், பொலிஸாரும் சிவில் பாதுகாப்புப் படையினரும் இணைந்து மேற்கொண்ட இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.





