தேசிய மக்கள் சக்தியின் (திசைகாட்டி) அரசாங்கம் ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற தனது கொள்கைப்பிரகடனத்தை முற்றாக மறந்து, தங்களுக்கு மாத்திரம் சொகுசான வாழ்க்கையையும் வளமான அரசாங்கத்தையும் உருவாக்கிக்கொண்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், திசைகாட்டி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து தற்பொழுது இரண்டு வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கமும் தங்களது கொள்கைப்பிரகடனத்தை முற்றாக மறந்துவிட்டதாகவே தோன்றுகிறது எனக் குறிப்பிட்டார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது இந்நாட்டு மக்கள் அநுர குமார திஸாநாயக்கவின் முகத்தைப் பார்த்து வாக்களிக்கவில்லை என்றும், மாறாக ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற கொள்கைத்திட்டத்தை நம்பியே வாக்களித்தனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், இந்த அரசாங்கம் மக்களின் அபிலாஷைகளை மாத்திரமன்றி, தாங்களாகவே தயாரித்த கொள்கைப்பிரகடனத்தையும் புறந்தள்ளிவிட்டு தன்னிச்சையாகச் செயல்பட்டு வருகின்றது என்றும் அவர் சாடினார்.
அவர் மேலும் கூறுகையில், சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) உடன்படிக்கையானது நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் ‘பொருளாதார ஸ்திரத்தன்மை’ மற்றும் ‘கடன் நிலைத்தன்மை’ ஆகிய இரு பிரதான காரணிகளை உருவாக்கியுள்ளது என்றும், இதன் அடிப்படையில் பொருளாதாரத்தை விரிவுபடுத்தி, நாட்டை வளமான பாதையை நோக்கி கொண்டு சென்றிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொண்டு பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கான எவ்வித திட்டங்களும் அரசாங்கத்திடம் இருப்பதாகத் தெரியவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.
ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகின்ற போதிலும், அரசாங்கத்தின் ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டம் கடந்த மாத நடுப்பகுதியில்தான் வெளியிடப்பட்டது என்றும், வரலாற்றில் நாம் எப்போதும் அந்நியச் செலாவணி நெருக்கடியின் நிழலிலேயே பயணித்து வரும் நிலையில், இதிலிருந்து விடுபட வேண்டுமாயின் ஏற்றுமதித் துறையில் பாரிய மாற்றம் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். தகுந்த அறிஞர்கள் தம்மிடம் இருப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், ஒரு திட்டத்தை வெளியிட இரண்டு வருடங்களை எடுத்துக்கொண்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு, இந்த அரசாங்கம் ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்பதற்குப் பதிலாக, வளமான ஒரு அரசாங்கத்தையும், அமைச்சர்களுக்கு அழகான சொகுசு வாழ்க்கையையுமே அமைத்துள்ளது என்றும், வரலாற்றில் உருவான மிக மோசமான முதலாளித்துவ அரசாங்கம் அநுர திஸாநாயக்கவின் இந்த திசைகாட்டி அரசாங்கமே ஆகும் என்றும் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
தற்போதைய சூழலில் விவசாயிகள் தங்களின் பிரச்சினைகளைத் தாங்களே தனித்துத் தீர்த்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் ஏழை மக்கள் அரசாங்கத்தின் எவ்வித ஆதரவும் இன்றித் தங்களது பிரச்சினைகளைத் தாங்களாகவே எதிர்கொள்ள நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
அரசாங்கம் தனது பொறுப்புகளிலிருந்தும், மக்களுக்குச் சேவை செய்யும் பாத்திரத்திலிருந்தும் முற்றாக விடுபட்டு, வெறுமனே வரிகளை வசூலிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது என அவர் குற்றம் சுமத்தினார்.
மேலும், அரசாங்கமும் நாடும் வெவ்வேறானவை என்றும், அரசாங்கத்திடம் உள்ள நிதி ஆதாரங்களை முறையாக முதலீடு செய்து, மக்களுக்குச் சேவை வழங்குவதன் மூலமே ‘வளமான நாட்டை’ உருவாக்க முடியும் என்றும், அவ்வாறு செய்யாவிடில், அது அரசாங்கத்தையும் அதன் அமைச்சர்களையும் மட்டுமே வளப்படுத்தும் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன சுட்டிக்காட்டினார்.

