நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட கலவரத்தின் போது, கைதிகள் சிறைச்சாலை வாசலை உடைத்து தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரிக்கு, கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
“உன்னை எங்காவது கண்டால் கொன்றுவிடுவோம். வெளியே மாட்டும் போது உன்னை விடமாட்டோம்” என அந்த அதிகாரியை கைதிகள் மிரட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலும், அவசர நிலைமை காரணமாக குறித்த அதிகாரி கடமைக்குத் திரும்பியிருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதையடுத்து, அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த சிறைச்சாலைகள் திணைக்களம் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
இதற்கிடையில், நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தை முன்னின்று வழிநடத்தியதாகக் கூறப்படும் ‘கட்டுவெல்லேகம சுரேஷ்’ என்பவர், தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இந்தத் தாக்குதலால் அவருக்கு சரியாக நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், கட்டுவெல்லேகம சுரேஷ் மற்றும் அவரது 13 சகாக்கள் இணைந்து கலவரத்தை திட்டமிட்டு நடத்தியுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுள் ‘ரொக்கி’ என அழைக்கப்படும் கைதியும் அடங்குவதுடன், கலவரத்தை வழிநடத்திய பின்னர் சம்பவத்துடன் தொடர்பில்லாதவர் போல் நடித்து, சிறைச்சாலை அதிகாரிகளுடன் இணைந்து கைதிகளுக்கு உணவு மற்றும் பானங்கள் விநியோகித்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 13 கைதிகளும் தற்போது பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, நீர்கொழும்பு சிறைச்சாலையின் பொறுப்பிலிருந்த 22 ‘ரிப்பீட்டர்’ ரக துப்பாக்கிகளும், 10 ‘T56’ ரக துப்பாக்கிகளும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலும், சிறைச்சாலையில் இருந்த ஏனைய ஆயுதங்களும் கட்டம் கட்டமாக CID-யிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, காணாமல் போயிருந்ததாகக் கூறப்பட்ட சிறைச்சாலைக்குச் சொந்தமான ஒரு ‘ரிப்பீட்டர்’ ரக துப்பாக்கி, சிறைச்சாலை வளாகத்திற்குள்ளேயே மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

