வெல்லம்பிட்டியில் மகன் செயற்பாட்டினால் அதிர்ச்சியடைந்த தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தந்தை வீட்டில் இல்லாத போது அங்கிருந்த அலுமாரி, கட்டில், நாற்காலிகள் உட்பட அனைத்து பொருட்களும் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய, முறைப்பாட்டாளரின் மகன் எழுதிய கடிதம் ஒன்று அந்த வீட்டில் இருந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
வீட்டில் திருட்டு
அதில் “அப்பா, எனக்கு ஒரு நல்ல பெண் கிடைத்துள்ளார். நான் அவருடன் வாழ செல்கிறேன். அந்த வீட்டில் எந்தப் பொருட்களும் இல்லை, எனவே எங்கள் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துச் செல்கிறேன்” என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே திருமணமான நிலையில் மனைவியை பிரிந்து மகன் தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில், மற்றுமொரு பெண்ணுடன் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளார்.
தந்தையின் முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபரான மகன் கைது செய்யப்பட்டதுடன், திருடப்பட்ட பொருட்கள் அனைத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
10 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான அந்தப் பொருட்களில் சில 40 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
தந்தையின் வீட்டில் ஒரு பழைய மெத்தையை மட்டும் விட்டுவிட்டு மற்ற பொருட்களையெல்லாம் ஒரு லொரியில் ஏற்றிச் சென்றமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
போதைக்கு அடிமையான 31 வயது மகன் தனது தந்தையையும் ஏமாற்றி இந்த திருட்டை செய்துள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.