ரஷ்யா (Russia) மீது உக்ரைன் (Ukraine) ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதில் எண்ணெய் கிடங்கில் தீப்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலானது இன்று (13) அதிகாலை ரஷ்யாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ரோஸ்டோவ் மாகாணத்தில் உள்ள பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதேபோல், உக்ரைனும் அமெரிக்கா (United States) மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவை தாக்கி வருகிறது.
எண்ணெய் கிடங்கில் தீ
இந்தநிலையில், குறித்த தாக்குதலால் எண்ணெய் கிடங்கில் தீப்பிடித்துள்ளதால் சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது, சுமார் 2100 சதுர அடி பரப்பளவில் தீ பரவியுள்ளது.
ஆனால் இந்த தீயினால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இரண்டு ஆளில்லா விமானங்கள் ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்பால் இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆளில்லா விமானத் தாக்குதல்
இதற்கிடையில், உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்பு ரஷ்யாவின் ஐந்து ஆளில்லா விமானங்களில் நான்கை இடைமறித்து அழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், உக்ரைன் வான்வெளியில் இருந்து பெலாரஸ் நோக்கி ஒரு விமானம் புறப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.