இலங்கையில் ஸ்டார்லிங்க் லங்கா (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்திற்கு இயங்குவதற்கான உரிமத்தை இலங்கை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.
இது தேசத்தில் இணைய புரட்சியை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவுள்ளதோடு இதன் அதிவேக இணைய சேவை மூலம் இன்றைய டிஜிட்டல் காலத்தில் கல்வி சார்ந்த முன்னேற்றங்களை இளைஞர்கள் அடைவார்கள்.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) 1991ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்புச் சட்டத்தின் 17B பிரிவின் கீழ் Starlink Lanka (Private) Limited நிறுவனத்திற்கு தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் உரிமத்தை உத்தியோகபூர்வமாக வழங்கியுள்ளது.
அதிவேக இணையம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எலோன் மஸ்க் ஆகியோருக்கு இடையில் இந்தோனேசியாவில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து இந்த அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது, மேம்பட்ட செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் ஊடாக அதிவேக இணையத்திற்கான தேசத்தின் அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இலங்கையை Musk’s Starlink வலையமைப்புடன் இணைப்பதற்கான விண்ணப்ப செயல்முறையை விரைவுபடுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கைக்கு இணையத்தை அறிமுகப்படுத்தியதைப் போன்றே, தற்போது அதிவேக இணைய சேவையையும் இலங்கைக்குக் கொண்டுவந்துள்ளார். இதனால் அனைவரும் இனி உலகோடு இன்னும் வேகமாக தொடர்புகொள்ள முடியும்.
தொழில்நுட்ப சேவை
இதன் விளைவாக, செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் மூலம் இலங்கையில் இணைய வசதி சேவைகளை வழங்க ஸ்டார்லிங்க் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த உரிமம் ஸ்டார்லிங்கை நாடு முழுவதும் செயற்கைக்கோள் தொழில்நுட்ப சேவைகளை வழங்க உதவுகிறது.
ஸ்டார்லிங்க் அறிமுகம் இலங்கை மக்களுக்கு பெரிதும் உதவும். பேரிடர் காலங்களிலும் பயன்படுத்த முடியும். தொலை தூரங்களில் இணைய தொடர்பு இல்லாமல் இருப்பவர்களும் பயனடைவார்கள்.
மேலும், மேம்பட்ட செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் மூலம் அதிவேக இணையத்திற்கான இலங்கையின் அணுகலை விரிவுபடுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாக இந்த உரிமம் ஆகஸ்ட் 12 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
அத்துடன், இலங்கையில் தற்போதுள்ள ஃபைபர் தொழிநுட்ப இணைய சேவையை விட இந்த இணைய சேவையானது பல மடங்கு வேகமானது என்பதனால் உலகில் எந்த இடத்திலிருந்தும் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.
இதனால் எதிர்காலத்தில் இலங்கையின் தொழில்நுட்பத் துறையில் சிறந்த சூழல் உருவாகும் என தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.