ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அடுத்த 5 வருடங்களுக்கு ஆட்சியில் அமர்த்தாவிட்டால் உலகின் அழிவடைந்த நாடுகளில் வரிசையில் இலங்கையும் இணைந்து கொள்ளும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி பிரதிநிதிகள் பலருடன் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி ரணிலின் தேர்தல் பிரசார அலுவலகத்திற்கு நேற்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம்
மேலும் தெரிவிக்கையில், “இந்த நாட்டில் ஜனநாயகம், மனிதாபிமானம், நீதி, சட்டம், நியாயம் புதைந்து கிடக்கும் இறுதித் தருணத்தில் ஜனநாயகம் என்ற தீபம் அணையவிருந்த போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனநாயகத்தையும் நாட்டையும் நாட்டின் பொருளாதாரத்தையும் சட்டத்தையும் பாதுகாத்தார்.
எனது வாழ்நாள் முழுவதும் அவருடன் அரசியல் ரீதியாக முரண்பாடுகளை கொண்டிருந்த போதும் 2022 இல் ரணிலை இந்நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்க நாடாளுமன்ற உறுப்பினராக வாக்களித்தேன்.
அன்று மொட்டுக் கட்சியில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது வாக்குகளைப் பயன்படுத்தி அவரை வெற்றிபெறச் செய்தனர்.
ஜனநாயகச் சுடர் அணையவிருந்த இக்கட்டான நேரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மட்டுமே அந்தப் பொறுப்பை ஏற்றிருக்க முடியும் என்பதை நாம் அறிந்திருந்தோம்.
நெருக்கடியான தருணம்
அன்று அவர் ஜனாதிபதியாக பதவி ஏற்காமல் இருந்திருந்தால், அடுத்த 24 மணி நேரத்தில், ஜனநாயகத்தின் உச்சமாக விளங்கும் நாடாளுமன்றம் எரிக்கப்பட்டு, இன்று பங்களாதேஷ் எதிர்கொள்ளும் நிலைக்கு இலங்கை வந்திருக்கும்.
ஆனால் 24 மணி நேரத்தில் இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தி ஜனநாயகத்தையும் சட்டத்தையும் பாதுகாத்தார்.
நெருக்கடியான தருணத்தில் இந்த நாட்டை காப்பாற்றியவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. அவருக்கான மரியாதையை நாம் அனைவரும் கொடுக்க வேண்டும்.
அவர் ஜனாதிபதியாக இல்லாவிடில் இன்று நான் உட்பட எவரும் மிஞ்சியிருக்க மாட்டார்கள். எங்கள் வீடுகள் தீ வைத்து அழிக்கப்பட்டன.
ஆர்ப்பாட்டக்காரர்கள் எம்மை அழிக்க நினைத்தார்கள். அந்தக் கொடூரத்தை இல்லாதொழித்து எங்களைக் காப்பாற்றியவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.