சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ (Arundika Fernando) இன்று (04) முதல் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அத்துடன் இப்போது சமூக வலைத்தளங்கள் மூலம் இளைஞர்களின் மனதை அழிக்கும் நிலைக்கு கொண்டு செல்கின்றனர் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இன்றைய (04.09.2024) நாடாளுமன்ற அமர்வின் போது சற்று நேரத்திற்கு முன்னர் சபையில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இருவரும் இணைந்து செயற்படல்
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இணைந்து செயற்பட வேண்டும்.
இன்று அரச உத்தியோகத்தர்கள் தபால் மூலம் வாக்களிக்கப் போகிறார்கள். 14 இலட்சம் அரச உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள். அரச உத்தியோகத்தர்களின் மூளைகள் முற்றாகக் கழுவப்பட்டுள்ளன. அரச ஊழியர்களிடம் பொய் வாக்குறுதிகளை நிரப்பியுள்ளனர்.
இந்த நாட்டில் 1971 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் குறிப்பாக 89 இல் இடம்பெற்ற இரண்டு கலவரங்களால், 60,000 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இப்போது இலக்கு இளைஞர்கள் தான், சமூக வலைத்தளங்கள் மூலம் இளைஞர்களின் மனதை அழிக்கும் நிலைக்கு கொண்டு செல்கின்றனர்.
சுயேட்சை உறுப்பினர்
இன்றிலிருந்து இதை மாற்றியமைக்க முடியுமா என பார்ப்போம். மாற்ற முடியாவிட்டால் தோற்கப்போவது ஜனநாயகம்தான்.
ஆனால், தோல்வியடைந்த பின்னர் மீண்டும் போராடச் சொன்னால், நாடாளுமன்றத்தை எரிக்க வேண்டும் என்று பேசினால், நான் இன்றிலிருந்து சுயேட்சை உறுப்பினராக மாறி அவர்களை தோற்கடிக்கக்கூடிய அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடலை மேற்கொள்வேன். என தெரிவித்தார்.
இதேவேளை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சராகவும் அருந்திக பெர்னாண்டோ செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.