பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herat) ஆகியோரின் உருவம் பொறித்த முத்திரைகள் வெளியிடப்பட்டமை தொடர்பில் தபால் திணைக்களம் (Department of Posts) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
உலக தபால் தினத்தின் தேசிய நிகழ்வு நேற்று (10) அலரி மாளிகையில் இடம்பெற்றதுடன், பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
இதையடுத்து, அனைத்துலக அஞ்சல் ஒன்றியத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நினைவு முத்திரைகள் வெளியிடப்பட்டதுடன் ஹரிணி அமரசூரிய மற்றும் விஜித ஹேரத் ஆகியோரின் உருவப்படம் கொண்ட இரண்டு முத்திரைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
உருவமுள்ள முத்திரைகள்
இவ்வாறு, பிரதமர் மற்றும் அமைச்சர் விஜித ஹேரத்தின் உருவம் பொறிக்கப்பட்ட முத்திரைகள் வெளியிடப்பட்டதும் சமூக வலைத்தளங்களில் அது பேசுபொருளாக மாறின.
இந்தநிலையில், இது தொடர்பாக தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பிரதமர் மற்றும் அமைச்சர் விஜித ஹேரத்தின் உருவம் பொறித்த முத்திரைகள் வெறும் நினைவுப் பரிசுகள் மட்டுமே.
உலக தபால் தினம்
அதேபோல், இந்த வருட உலக தபால் தினத்தை முன்னிட்டு பிரதமர் அல்லது அமைச்சர் விஜித ஹேரத்தின் உருவம் பொறித்த முத்திரைகள் வெளியிடப்படவில்லை.
எந்த ஒரு நபரும் தனக்கு விருப்பமான படத்தைப் பயன்படுத்தி தனிப்பயனாக்க முத்திரைகளை அச்சிடலாம் அத்தோடு விசேட சந்தர்ப்பங்களில் நினைவுப் பொருட்களாக தனிப்பயனாக்கப்பட்ட முத்திரைகளை தபால் திணைக்களம் பாரம்பரியமாக வழங்குகின்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.