இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
காலியில் நேற்றிரவு மர்மநபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் பெத்தும் அல்லது ‘லொக்கா’ என்ற நபர் கொல்லப்பட்டார்.
தடல்ல பிரதேசத்தில் பெண் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகம்
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T-56 ரக துப்பாக்கியால் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
படுகாயமடைந்த நபர் காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
கொலைகள் மற்றும் போதைப்பொருள்
கொலை செய்யப்பட்ட நபர், காலி, மெலேகொட பகுதியைச் சேர்ந்த 5 கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தலின் போது ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.