வாகனங்கள் தொடர்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
12 லட்சம் ரூபாவிற்கு விட்ஸ் ரக வாகனமொன்றை கொள்வனவு செய்யக்கூடிய வகையில் பொருளாதாரத்தை சீர் செய்வோம் என தேசிய மக்கள் சக்தி உறுதிமொழி வழங்கியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாபா பண்டார தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பிரசாரம்
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் அனைத்து வீடுகளிலும் 12 லட்சம் ரூபா பெறுமதியான விட்ஸ் ரக வாகனம் ஒன்றை நிறுத்த முடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
12 லட்சம் ரூபாவிற்கு விட்ஸ் ரக வாகனமொன்றை கொள்வனவு செய்ய முடியும் என பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தேர்தல் மேடைகளில் பிரசாரம் செய்திருந்தார் என வசந்த யாபா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வாக்குறுதியின் அடிப்படையில் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்திருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
வாக்குறுதி
விட்ஸ் ரக வாகனமொன்றை 12 லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் எனவும் அரசாங்கம் 70 முதல் 80 லட்சம் ரூபா வரி அறவீடு செய்வதாகவும் நலின் ஹேவகே தேர்தல் பிரசார மேடைகளில் குறிப்பிட்டிருந்தார்.
வாகனங்களின் விலை அதிகரிப்பானது ஊழல் மோசடி மிக்க அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினால் ஏற்பட்டது என நலின் ஹேவகே குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கூற்றுக்களின் அடிப்படையில் வாகனங்கள் விற்பனை செய்யப்பட வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாபா அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.