இலங்கைக்குள்(Sri lanka) இனவாதம் என்ற சொல்லை உச்சரிக்காத அளவுக்கு உங்களின் (தமிழ்
மக்களின்) செயற்பாடுகள் அமைந்துள்ளதால் உங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது
எங்களின் பொறுப்பாகும்.
இதேபோன்றுதான் முழு இலங்கையும் எமது புதிய அரசாங்கம் மீது பாரிய எதிர்பார்ப்பில் இருக்கின்ற நிலைமையில் அதனை மறந்து நாம்
செயற்படப்போவதில்லை என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனெவி தெரிவித்துள்ளார்.
யாழ். தெல்லிப்பழையில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
புதியதொரு மாற்றம்
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
“இலங்கையில் புதியதொரு மாற்றம் வேண்டுமென அனைத்து மக்களும் எமக்கு ஆதரவை
வழங்கியிருக்கின்றனர்.
அத்தகைய மாற்றத்தின் பின்னர் முழு இலங்கையும் பாரிய
எதிர்பார்ப்பில் இருக்கின்றது.
குறிப்பாக இங்குள்ள மக்கள் அனைவரும் கடந்த தேர்தலில் எங்களுக்கு வழங்கிய ஆதரவை
நாங்கள் மறந்து செயற்பட முடியாது.
இந்தப் புதிய அரசாங்கம் தங்கள்
எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக எமக்கு ஆதரவை வழங்கியுள்ளனர்.
மக்களின் எதிர்ப்பார்ப்பு
அவ்வாறு நாடு முழுவதும் பாரிய மக்கள் ஆணையோடு நாம் ஆட்சிக்கு
வந்திருக்கின்றோம். அதிலும் யாழ்ப்பாணத்தில் கூட எமது கட்சியில் மூன்று
நாடாளுமன்ற உறுப்பினர்களை நீங்கள் தெரிவு செய்துள்ளீர்கள்.
அதனூடாக நீங்கள் அனைவரும் மீண்டுமொரு தடவை இலங்கைக்குள் இனவாதம் என்ற சொல்லை
உச்சரிக்காத அளவுக்கு எம்மை அழைத்துள்ளீர்கள்.
ஆகையினால் கௌரவமான வாழ்வுக்கான உங்களின் எதிர்பார்ப்பைப் பாதுகாப்பதும்
அதற்காகப் பணியாற்றுவதும் எமது பொறுப்பாகும்.
அத்தகைய பொறுப்பை மறந்து நாங்கள் செயற்படப் போவதில்லை. உங்களின் எதிர்பார்ப்பை
நிறைவேற்றும் வகையலேயே எமது செயற்பாடுகள் அமையும்” என குறிப்பிட்டுள்ளார்.