மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய அர்ஜூன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதில் முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் (Ranil Wickremesinghe) பிரதான பொறுப்பு உண்டு என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (25.02.2025) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த வழக்கு விசாரணைகள் எவ்வித தடையும் இன்றி முன்னெடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் இதன்போது தெரிவித்தார்.
வழக்கு விசாரணை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அர்ஜூன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதில் சட்ட ரீதியான சிக்கல்கள் காணப்படுகின்றன.
எவ்வாறிருப்பினும் அவற்றை நிவர்த்தி செய்து அவரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு முயற்சிக்கின்றோம்.
அவர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டாலும் அழைத்து வரப்படாவிட்டாலும் வழக்கு விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த போது, அர்ஜூன மகேந்திரன் அவரது நண்பனின் திருமணத்துக்குச் செல்வதாகவே கூறிச் சென்றதாக நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருக்கின்றார்.
முன்னாள் ஜனாதிபதி
எனவே அவரை நாட்டுக்கு அழைத்து வருவதில் முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொறுப்பிருக்கின்றது.
எனவே அவரை அழைத்து வருவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்தால் வழக்கு விசாரணைகளுக்கு ஏதுவாக அமையும். எது எவ்வாறிருப்பினும் மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த வழக்கு விசாரணைகள் எவ்வித தடையும் இன்றி முன்னெடுக்கப்படும்.
அர்ஜூன மகேந்திரனுக்கு விடுமுறைக்கு அனுமதி வழங்கியமைக்கு அப்பால் மத்திய வங்கி பிணை முறி மோசடியில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்பிருக்கிறது.
பிணை முறி கோரல் முறைமையை அவசரமாக மாற்றியமை உள்ளிட்ட காரணிகள் தொடர்பில் அவர் பதிலளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.