யாழ்ப்பாணத்தில் (Jaffna) உறுதிப்பத்திரங்கள் இல்லாத காணிகள் இருப்பதை போன்று ஒரு வீட்டுக்கு இரண்டு உறுதிப்பத்திரங்களை கொண்ட காணிகளும் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமாரன் (Karunananthan Ilankumaran) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (22.05.2025) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், “யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கின்றது.
வடக்கு மாகாணம்
இந்த மாவட்டமாவது 30 வருட யுத்தத்தை எதிர்கொண்டது. தென்பகுதியை விடவும் 30 வருடங்கள் பின்னாலேயே வடக்கு மாகாணம் இருக்கின்றது. இதனால் அந்த மாகாணத்தின் அபிவிருத்திக்கு அரசாங்கம் அதிகளவான நிதியை ஒதுக்கியுள்ளது.

கடந்த காலங்களில் ஆட்சி புரிந்தவர்கள் எவரும் வடக்கின் அபிவிருத்திக்கான இலக்குடன் செல்லவில்லை. இனவாதம் கதைத்துக்கொண்டே பயணித்தனர்.
ஆனால் இப்போது அரசாங்கம் அனைத்து இனங்களையும் உள்ளடக்கியதாக நாட்டின் அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்கின்றது. இதேவேளை தமிழ் அரசியல்வாதிகள் மீண்டும் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்றனர்.
தேசிய மக்கள் சக்தி தொடர்பில் எதிர்க்கட்சிகள் போலி பிரசாரங்களை செய்தனர். ஆனால் நாங்கள் மக்கள் மத்தியில் பொய் பிரசாரங்களை செய்யவில்லை.
யாழில் காணிப் பிரச்சினை
யாழ்ப்பாணத்தில் காணிப் பிரச்சினைகளால் மக்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். அவர்களுக்கு உறுதிப்பத்திரம் இல்லை. பலர் உறுதிகளை காணாமலாக்கியுள்ளனர். அதேபோன்று ஒரு வீட்டுக்கு இரண்டு உறுதிப்பத்திரங்கள் உள்ளன.
சட்டத்தரணிகள் சிலர் நுட்பமான முறையில் இரண்டு உறுதிப் பத்திரங்களை முடித்து நீதிமன்றத்தில் வழக்குகள் நடக்கின்றன.

அதேநேரம் யுத்த காலத்தில் சுவீகரிக்கப்பட்ட இடங்களைகூட அரசாங்கத்தின் உதவியுடன் இடங்களை பெற்றுள்ளனர். எதிர்காலத்தில் நாங்கள் மக்கள் காணிகளை மக்களிடமே ஒப்படைப்போம்.
இன்று அரச காணி எது தனியார் காணி எது என்று கண்டுபிடிக்க முடியாதுள்ளது. இதனை அடையாளப்படுத்தும் போது யாருடைய வீட்டையும் குடிமனைகளையும் சுவீகரிக்கப் போவதில்லை.
அவ்வாறு செயற்பட்டால் மீண்டும் இந்த நாட்டில் இன நல்லிணக்கம் ஏற்படாது. தங்களுடைய காணி அடையாளங்களுக்கான அத்தாட்சிப் பத்திரங்களை காட்டினால் அவர்களுக்கான உறுதிப்பத்திரங்களை வழங்கவே நடவடிக்கை எடுப்போம்”என்றார்.

