நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை அநுரகுமார திஸாநாயக்கவும் அனுபவிக்க
ஆரம்பித்துள்ளார் போலும். அதனால்தான் அவரது நாடாளுமன்ற உரையில் புதிய அரசமைப்பு
பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா
தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் உறுதிமொழி..
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதற்காக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி
முறைமை நீக்கம், தேர்தல் முறைமை மாற்றம் உள்ளடங்கலாக புதிய அரசமைப்பு விரைவில்
இயற்றப்படும் எனத் தேசிய மக்கள் சக்தி உறுதியளித்திருந்தது.
ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் ஒன்றரை மணிநேரம் உரையாற்றினார். எனினும், புதிய
அரசமைப்பு பற்றி அவர் வாய் திறக்கவில்லை.

எனவே, புதிய அரசமைப்புக்குரிய சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக நாடாளுமன்றத்
தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு யோசனை முன்வைக்கப்படவுள்ளது. இது தொடர்பில்
எமது கட்சி முடிவெடுத்துள்ளது.
அரசின் இறுதிக் காலகட்டத்தில் புதிய அரசமைப்புக்குரிய பணியை முன்னெடுக்க
முடியாது. அரசுக்குரிய செல்வாக்கும் இருக்கும்போதே அதற்குரிய பணி
ஆரம்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

