2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி, அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில் குறித்த பரீட்சையில் சிங்கள மொழி மூலம் காலி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் 198 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி (A.K.S. Indika Kumari) தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழ் மொழி மூலம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 194 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்
இன்று (04) காலை நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பின் போது, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி இதனை அறிவித்தார்.
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் நேற்று (03) இரவு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டன.

அதன்படி, பீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.doenets.lk இல் பெறுபேறுகளைப் பார்வையிடலாம்.
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி நாடு முழுவதும் 2,787 நிலையங்களில் நடைபெற்ற நிலையில் 307,951 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
அத்துடன் இந்த ஆண்டு 901 விசேட தேவையுடைய மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியதாகவும், இதில் 12 பேர் பிரெய்லி எழுத்து முறையை பயன்படுத்தியதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

