இலங்கை மக்களை மகிழ்ச்சிப்படுத்த மாதமொன்றுக்கு ஒரு மேடை நாடகம் வீதம் மாதம் தோறும் இலவச மேடை நாடகங்களை நாட்டின் பல்வேறு நகரங்களில் அரங்கேற்ற இருப்பதாக பிரதியமைச்சர் நளின் ஹேவகே வாக்குறுதியளித்துள்ளார்.
ஊடகவியலாளர்களுடனான கருத்துப் பகிர்வொன்றின் போது அவர் மேற்கண்ட யோசனையை வெளிப்படுத்தியுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையை அபிவிருத்தி அடைந்த நாடாக அல்லது செல்வந்த நாடாக மாற்றுவதாக வாக்குறுதி அளிக்க முடியாது.
மேடை நாடகங்கள்
ஆனால் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடாக மாற்றியமைக்க முடியும்.
அதற்காக நாட்டின் பல்வேறு நகரங்களில் மாதம் தோறும் ஒவ்வொரு மேடை நாடகங்களை இலவசமாக அரங்கேற்ற முடிவு செய்துள்ளோம்.
அதன் மூலம் பொதுமக்களின் கேளிக்கை அபிலாசைகளை நிறைவேற்ற எதிர்பார்த்துள்ளோம்.

ஏனெனில் பற்றுச்சீட்டு விலை அதிகரிப்பின் காரணமாக பொதுமக்கள் மேடை நாடகங்களை பார்வையிடும் சந்தர்ப்பங்கள் குறைந்துள்ளது.
அதேபோன்று தற்போதைக்கு 125 வீதமாக உள்ள கேளிக்கை வரியும் விரைவில் 12 வீதமாக குறைக்கப்படும் என்றும் பிரதியமைச்சர் நளின் ஹேவகே உறுதியளித்துள்ளார்.

