திருக்கோவில் பகுதியில் வெளிநாட்டு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட சந்தேகநபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கல்முனை மாரண்டமடு பகுதியில் திருக்கோவில் காவல் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் காவல் நிலைய அதிகாரிகள் குழு இன்று (16) நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கடலை வியாபாரி
செப்டம்பர் 24 ஆம் திகதி இலங்கைக்கு சுற்றுலா வந்த நியூசிலாந்து பெண் ஒருவர், ஒக்டோபர் 25 ஆம் திகதி சுற்றுலா சென்றிருந்தபோது ஒரு இளைஞர் தகாத நடத்தையில் ஈடுபட்டதாகக் கூறி இலங்கை சுற்றுலா காவல் பிரிவில் முறைப்பாடளித்திருந்தார்.

இது தொடர்பான காணொளியும் சமூக ஊடகங்களில் பரவியிருந்த நிலையில், இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இந்த செயற்பாட்டிற்கு எதிராக பெரும் விமர்சனங்கள் கிளம்பியிருந்தன.
இதன்படி, தொடர்புடைய காணொளிகள் மூலம் சந்தேக நபர் திருக்கோவில் பகுதியில் கடலை விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தோற்றத்தில் மாற்றம்
அதனைதொடர்ந்து, கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேகநபர் 25 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தை என கவால்துறை விசாரணைகளில் கண்டறிந்துள்ளனர்.

சம்பவத்திற்கு பிறகு அவரும் அவரது மனைவியும் திருக்கோவில் பகுதியில் பல வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர்.
அத்துடன், தங்கள் வாழ்ந்து வந்த வசிப்பிடத்தில் இருந்து தப்பிச் சென்றிருந்த சந்தேகநபர், கைது செய்யப்படும் போது தலையை மொட்டையடித்து, தோற்றத்தை மாற்றியிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொத்துவில் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

