விளையாட்டில் தடைசெய்யப்பட்ட ஊக்குப்பதார்த்தங்களின் கையாளல் மற்றும் விதிவிலக்கு நிலைகள் தொடர்பாக வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியிலுள்ள பிழைகளைத் திருத்துமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் விடுத்த கோரிக்கைக்கு, ஊக்குப்பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான இலங்கை முகவராண்மை எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளது.
கடந்த 2026.01.16 அன்று வெளியிடப்பட்ட 2471/51 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் ஆங்கில மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புகளில் நிலவும் பிழைகளைச் சுட்டிக்காட்டி, அவற்றை உடனடியாகத் திருத்தியமைக்குமாறு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் எம்.பி கடந்த 2026.04.22 அன்று உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
இக்கடிதத்தின் தொடர்ச்சியாக, SLADA இன் பணிப்பாளர் நாயகம் Dr. சிரோமி பிலாபிட்டிய டி அல்விஸ் அவர்களினால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அனுப்பப்பட்டுள்ள பதில் கடிதத்தில் இவ்விடயம் தொடர்பான உத்தியோகபூர்வ விபரங்கள் விளக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினரின் சுட்டிக்காட்டல்களுக்கு அமைவாக, குறித்த வர்த்தமானியில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கோரி அரசாங்க அச்சுத் திணைக்களத்திற்கு SLADA நிறுவனத்தினால் அவசர கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.
எனினும், குறித்த அதிவிசேட வர்த்தமானி ஏற்கனவே இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுவிட்டதால், அதில் உடனடியாகத் திருத்தங்களைச் செய்ய முடியாது என அரசாங்க அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளதாக SLADA இன் பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்துச் செய்துவிட்டு, புதிய திருத்தப்பட்ட பதிப்பை வெளியிடுவதாயின் அதற்கு அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் அங்கீகாரங்களை மீண்டும் பெறவேண்டும் என்பதால், அது அதிக காலதாமதத்தை ஏற்படுத்தும் எனவும் அச்சுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தத் தடைப்பட்டியலானது வருடாந்தம் வெளியிடப்பட வேண்டிய ஒன்று என்பதால், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் எம்.பி அவர்களினால் சுட்டிக்காட்டப்பட்ட அனைத்து மொழிபெயர்ப்பு மற்றும் உள்ளடக்கப் பிழைகளும் வரும் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய தடைப்பட்டியல் பதிப்பில் முழுமையாகத் திருத்தப்படும் என SLADA உறுதியளித்துள்ளது.
இதற்கான தயாரிப்புப் பணிகள் வரும் செப்டம்பர் 2026 இல் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், வருங்காலங்களில் இவ்வாறான மொழிபெயர்ப்புப் பிழைகள் மற்றும் வடிவமைப்புத் தவறுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்குரிய தகுந்த சோதனை மற்றும் சரிபார்ப்பு நடைமுறைகள் பின்பற்றப்படும் எனவும் முகவராண்மை மேலும் தெரிவித்துள்ளது.

