முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவை, கடந்த 2006ஆம் ஆண்டு இலங்கை கடற்படையில் இணைத்துக்கொண்டமை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட இலஞ்ச, ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இன்று வெள்ளிக்கிழமை காலை கைது செய்யப்பட்டு, பின்னர் மாலை நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை 10:05 மணியளவில் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் வளாகத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
யோஷித ராஜபக்ஷ, கடற்படையின் நிறைவேற்று அதிகாரி பதவிக்குரிய அடிப்படைத் தகைமைகளைக் கொண்டிருக்காத நிலையிலும், விதிகளை மீறி அவர் அந்தப் பதவிக்கு ஆள்சேர்ப்பு செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே வசந்த கரன்னாகொட கைது செய்யப்பட்டார்.
அத்துடன், கடற்படையின் நிலையான ஆள்சேர்ப்பு நடைமுறைகளைப் புறந்தள்ளி, பிரித்தானியாவின் றோயல் கடற்படைக் கல்லூரியில் யோஷித ராஜபக்ஷ பயிற்சி பெறுவதற்காக அரச நிதி பயன்படுத்தப்பட்டது என்றும் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தது.
இந்த முறைகேடான செயற்பாடுகள் அனைத்தும் இலஞ்ச, ஊழல் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுவதாகச் சுட்டிக்காட்டிய ஆணைக்குழு, கைது செய்யப்பட்ட வசந்த கரன்னாகொடவை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று மாலை ஆஜர்படுத்தியது.
இதன்போது, இலஞ்ச, ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணிகளின் சமர்ப்பிப்புகளைப் பரிசீலித்த கொழும்பு பிரதம நீதிவான் அசங்க எஸ். போதரகம, வசந்த கரன்னாகொடவைப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.
இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் யோஷித ராஜபக்ஷ ஏற்கனவே கடந்த ஜூன் 17ஆம் திகதி கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Source: https://samugammedia.com/wasantha-karannagoda-released-on-bail-1783085393

