நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.
இன்று (06) வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், சிறைச்சாலை நிர்வாகத்தின் செயலிழப்பு மற்றும் அலட்சியமே இந்த உயிரிழப்புகளுக்கும் காயங்களுக்கும் காரணம் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், தற்போதைய ஜனாதிபதி எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில், சிறைச்சாலைகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பு அரசாங்கமே எனக் கூறியிருந்ததை நினைவுபடுத்திய சஜித் பிரேமதாச, அதே கொள்கை தற்போதைய அரசாங்கத்திற்கும் பொருந்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் வாக்குறுதியளித்த System Change தோல்வியடைந்துள்ளதாகவும், நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் ஆட்சி, சட்டம்-ஒழுங்கு மற்றும் சிறைச்சாலை நிர்வாகத்தில் உள்ள பாரிய குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதற்கும், மனிதாபிமான அடிப்படையிலான சிறைச்சாலை நிர்வாகத்தை உறுதிப்படுத்துவதற்கும் அரசாங்கத்துக்கு திறன் உள்ளதா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பாக அரசாங்கத்திற்கு சாதகமான அறிக்கையை வழங்கும் குழுவொன்றின் விசாரணைக்கு பதிலாக, சுயாதீனமான, பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தற்போதைய அரசாங்கம் தற்பெருமையை கைவிட்டு, தேசிய பாதுகாப்பு, சிறைச்சாலை நிர்வாகம் உள்ளிட்ட நாட்டின் அவசர பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

